நீட்’ தேர்வை விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் – கெளதமன்

நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்து, விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்க, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க ஒன்று திரண்டது போல, ‘நீட்’டை விரட்ட ஒட்டுமொத்த தமிழினமும் கட்டாயம் மீண்டும் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். தமிழகத்தில் நீட் தேர்வானது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இக்குழு, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு வரும் நிலையில், இந்தக் குழுவே தவறென்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட அரசாணைக்கு தடை விதித்து அதனை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாடு பா.ஜ.க., பொதுச் செயலாளர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வு என்கிற குரூர எமனால், எங்களின் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, பட்டியல் வகுப்பு மற்றும் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மாணவி அனிதா உட்பட 13 மாணவர்களை அநியாயமாக இழந்துள்ளோம். இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என்றும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்புவது எத்தகைய அறம்?  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலேயே கூட அங்குள்ள மாகாணங்களுக்கு ஏற்ப கல்விப் பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் இருந்து வரும் நிலையில், பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு பாடத்திட்டங்களில் பயின்றுவரும் இந்திய ஒன்றியத்தில் மட்டும் நீட் என்கிற ஒற்றைத் தேர்வு முறை எப்படிச் சரியாக இருக்கும்? உலகெங்கும் நடைபெற்ற தகுதித் தேர்வுகள் அதன் முடிவில் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஆய்வுகள் வெளிவந்து  அவை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் இங்கு மட்டும் தலைகீழ் நடைமுறை கையாளப்படுவது ஏன்? தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முடிவெடுத்து, சட்டமன்றத்தில் ஒருமனதாக இரு முறை சட்டம் இயற்றி, அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  எப்பொழுதும் போல இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டு அரசின் மக்கள் பிரதிநிதிகளையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை.   அரசு கொடுத்த மதிப்பெண்ணை வைத்து மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைத் தேர்வு செய்தால் சாமானியர்கள் கூட மருத்துவர் ஆகிவிடுவார்கள் என்று பா.ஜ.க., பதற்றம் அடைகிறது. இவ்வளவு காலமும் எங்களுடைய உரிமையைப் பறித்து, அளவுக்கு அதிகமாக அனுபவித்த கூட்டம் தங்கள் வசதிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு வைத்தால் கொரோனா கூடும் என்றவர்கள் நீட் தேர்வு வைத்தால் மட்டும் எங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கொரோனா விட்டுவைத்து விடுமா என்ன? யாரை ஏமாற்ற இப்படிப்பட்ட நிலைப்பாடு.  மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் என்பது ஒரு மகத்தான பேரிடம். சட்டத்தை உருவாக்குகிற இடத்திற்கே சட்டத்திற்கு மரியாதை இல்லை என்றால், சட்டத்தை நிர்வகிக்கிற இடங்கள் எப்படி அதனைக் கட்டுப்படுத்த முடியும்?. நேர்மை மிகுந்த சட்டங்களையும், சட்டமன்றத்தின் அதிமுக்கிய நிலைப்பாடுகளையும் நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும். அதுதான் நீதிதேவதைக்குச் செய்யும் மரியாதை. மக்களுக்காக சட்டமா? சட்டத்திற்காக மக்களா? மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தானே நீதி. உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை ஒருபோதும் கலைக்கக் கூடாது. மக்களோடு நின்று ஆய்வு செய்து, நீட் ஏற்படுத்திய பாதிப்புகளை அவர்கள் பிரகடனப்படுத்தும் போது அதனை மதிக்கவும் தவறக் கூடாது. ஜல்லிக்கட்டு விளையாட்டை  உச்ச நீதிமன்றம் தடை செய்தபோதும், அறம் சார்ந்த நிலையில் நின்று உக்கிரமாகப் போராடி அதனை நாங்கள் மீண்டும் மீட்டோம்.  எங்கள் தமிழினம் நீட் தேர்வினால் ஏற்படும் பேராபத்துகளை தொடர்ந்து வேடிக்கை பார்க்காது என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் பா.ஜ.க.,வைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்று கூட்டி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற தீவிர ஆலோசனை செய்ய வேண்டும். நீட் தேர்விற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான  சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவு படுத்தவேண்டும்.
அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியிருக்கும் கருத்துரிமையை நீதி மன்றங்கள்கூட பறித்துவிட முடியாது. கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. கல்வி உரிமை மாநிலப் பட்டியலில் இருந்திருக்குமானால், நம்முடைய 13 மாணவ செல்வங்களை பதைக்க பதைக்க இழந்திருக்க மாட்டோம். எனவே, இந்திய ஒன்றிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, சமூக நீதிக்கு புறம்பான, ஏழை எளிய மாணவர்களுக்கு விரோதமான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் சூழலில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை விட மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டத்தைத் தமிழ்ப் பேரரசு கட்சி சமரசமின்றி முன்னெடுத்து ஓர் அறப்போருக்கு தயாராகும் என்பதனை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

*வ. கெளதமன்*
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,