திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக அரசின் நலத் திட்டங்களையும் விளக்கி பேசியதை அமைச்சர் பாராட்டினார். பின்னர் கற்பித்தல் பணிக்கான மற்றும் கல்வி உபகரணங்களை பார்வையிட்டார். மாணவ, மாணவிகள் வென்ற கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை பார்த்து அவர்களை பாராட்டினார். பின்னர் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்து கழிவறைகளை பார்வையிட்டு சேதமடைந்த பகுதிகளை உடன் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஒன்றாம் வகுப்பில் 100 வது மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பத்தினை வழங்கி அமைச்சர் அவர்களே மாணவியின் பெயரை எழுதி சேர்க்கை வழங்கினார். அருகிலுள்ள எடமலைப்பட்டிபுதூர் அரசு உயர்நிலை பள்ளியையும் பார்வையிட்டார். அடுத்ததாக 11.15 மணியளவில் மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து ஒன்றாம் வகுப்பு முதல் மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு  அமைச்சரும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கினார்கள். அதன்பின் விளையாட்டு மைதானம், கழிவறை, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், அட்டல் டிங்கரிங் லேப், ஆங்கில ஆய்வுகூடம், தொழிற்பயிற்சி தையல்கூடம், நூலகம், ஸ்மார்ட்கிளாஸ், ஸ்மார்ட் போர்ட் போன்றவற்றை பார்வையிட்டு தக்க அறிவுரைகளையும் வழங்கினார். ஆசிரியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அடுத்ததாக 12.00 மணியளவில் பூனாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரோடு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்து பேருந்து வசதி வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்டார். அடுத்ததாக 01.00 மணியளவில் துறையூர், வெங்கடேசபுரம் மான்ய நடுநிலைப் பள்ளியை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.ஸ்டாலின் குமார் அவர்களோடு பள்ளியை ஆய்வு செய்தார். தலைமையாசிரியரிடம் கல்வி தொலைகாட்சி காலஅட்டவணையை வீட்டிற்கே சென்று வழங்க அறிவுறுத்தினார். பிற்பகல் 01.30 மணிக்கு கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினரோடு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மாணவன் அனுப்பிய பள்ளியினை தரம் உயர்த்தல் கோரி கொடுத்த மனு குறித்து கேட்டறிந்து பள்ளியில் நடைபெறும் பல திறன்களை கேட்டறிந்து வரும் கல்வியாண்டில் விடுபட்ட திறன்கள் இருந்தால் தன்கவனத்திற்கு கொண்டுவருமாறு கூறினார். பிற்பகல் 02.30 மணிக்கு துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை துறையூர் சட்டமன்ற உறுப்பினரோடு ஆய்வு செய்தார், மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கினார். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் பெயரை மீண்டும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தார்கள். பள்ளியின் கட்டிடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை ஆய்வு செய்தார்.