சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். திரைப்படம் மே.16ல் வெளியீடு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில்  நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்   ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ இத்திரைப்படம் மே.16 திரைக்கு வருகிறது.  பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். நகைச்சுவை கலந்த பேய் படமாக இப்படம் வெளிவருலிறது. *********

இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் சந்தானம் பேசியதாவது: ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல்லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை  பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன்.  இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது.  ‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது.  இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன்.

நடிகர் ஆர்யா பேசுகையில், ”இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.  ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.