“மாண்புமிகு பறை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தேரியது. இவ்விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது: “மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது, சிலிர் பூட்டியது, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே. பாக்ய ராஜ் அவர்களின் உரை, எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டி வைத்தது, வியப்புக்குள்ளாக்கியது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது. மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.******
பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள். பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்த கிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை. இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை. இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார். அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்ட கால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன். இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும்.
இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்

