CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) மற்றும் CSIR சென்னை வளாகத்தில் (CMC), 2025, மார்ச் 8 முதல் 20 வரை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா 20 மார்ச் 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினர்களாக தேசிய சமுத்திர தொழில்நுட்ப நிறுவன (NIOT) மூத்த விஞ்ஞானி முனைவர் பூர்ணிமா ஜலிஹால், மற்றும் Northern Trust Corporation நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் திருமதி ஹேமா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்திற்கான “துரிதமான செயலாக்கம் ” (Accelerate Action) எனும் கருப்பொருளை முன்வைத்து CSIR-SERC மற்றும் CMC ன் இயக்குநர் முனைவர் என். ஆனந்தவல்லி வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் மகளிர் தினம் பெண்களின் சாதனைகளை முன்னிறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதையும், பல்வேறு துறைகளில் முன்னோடியான பெண்கள் உருவாக்கிய பாதை பற்றி விளக்கினார். மேலும், பாலின சமத்துவத்தை அடைய வேண்டிய அவசியத்தையும், தற்போது CSIR-SERCயில் 25% விஞ்ஞானிகள் பெண்களாக இருப்பதையும், பெண்களின் சமநிலையான பிரதிநிதித்துவத்திற்கான முயற்சிகள் முன்னேறி வருவதை குறிப்பிட்டார்.
CSIR-SERCன் முதன்மை விஞ்ஞானியான முனைவர் பி. காமாட்சி, சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளைப் பற்றிய அறிக்கையை வழங்கினார். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள், மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதை எடுத்துரைத்தார். CSIR-NML, மூத்த விஞ்ஞானியான முனைவர் அஜிதா குமாரி, தலைமை விருந்தினர் முனைவர் பூர்ணிமா ஜலிஹாலை அறிமுகப்படுத்தினார். முனைவர் ஜலிஹால் தனது உரையில், “சமுத்திரத்திலிருந்து எரிசக்தியும் நீரும் – ஒரு பெண் விஞ்ஞானி மற்றும் பொறியாளரின் சவால்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். NIOT இன் செயல்பாடுகள், நீலப் பொருளாதாரம், சமுத்திர வளங்கள், அலைகளின் சக்தியால் இயங்கும் உப்பு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள், சமுத்திர வெப்ப ஆற்றல் மாற்றம், லட்சத்தீவுகளில் அமைக்கப்பட்ட நீர் நிலையங்கள் போன்ற முக்கிய திட்டங்களை விளக்கினார். மேலும், ஒரு பெண் கட்டமைப்பு பொறியாளராக தனது ஆரம்ப வாழ்க்கை, சந்தித்த சவால்கள், மற்றும் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய திட்டங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
CSIR-SERC முதன்மை தொழில்நுட்ப அலுவலர் முனைவர் எஸ். விஜயலட்சுமி, தலைமை விருந்தினர் திருமதி ஹேமா சந்திரசேகரை அறிமுகப்படுத்தினார். திருமதி ஹேமா தனது உரையில் ” “துரிதமான செயலாக்கம் ” (Accelerate Action) என்ற கருப்பொருள் ஒரு சக்திவாய்ந்த வாசகம் என்றும், அனைவரும் அதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், நம்முடைய வேர்களை அறிதல், ஒரு ஆதரவுத் தொகுப்பை உருவாக்குதல், மற்றும் நம்முடைய பலங்களை கண்டறிதல் ஆகிய மூன்றும் முன்னேற்றத்தைத் தூண்டும் முக்கிய அம்சங்கள் என குறிப்பிட்டார். வாழ்க்கையை சமநிலையாக கொண்டு செல்வதும், முன்னுரிமைகளை தீர்மானித்தல், தீர்வுகளை மேற்கொண்டு அவற்றுடன் நிலைத்து நிற்றல், மற்றும் நேர்மறையாக, தைரியமாக இருப்பதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
நிகழ்வின் நிறைவில், CSIR-CEERI நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி திருமதி ஏ. மெர்சி லதா நன்றி உரையாற்றினார்.