சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் புதுமையான நிகழ்நேர உட்புற வரைபடத் தீர்வை உருவாக்கியுள்ளது. அதன்படி எந்த வெளிச்சத்திலும் அல்லது சூழல் நிலைகளிலும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைச் சார்ந்து குறைந்தபட்சமாக துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும். பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்குஇந்த திருப்புமுனைத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், வழக்கமானஉள்கட்டமைப்புகள் பெரும்பாலும் பொதுப் பாதுகாப்பு அவசரநிலைகளின்போது அணுக முடியாததாகவோ அல்லது நம்பகத்தன்மை அற்றதாகவோ ஆகிவிடும் சூழல் உள்ளது. இலகுரகத் தொழில்நுட்பம் ரேடியோ அதிர்வெண் அடிப்படையிலான இமேஜிங்கை ‘உபிக்மேப்’ பயன்படுத்துகிறது. ‘ரேடியோ டோமோகிராஃபிக் இமேஜிங்’ (Radio Tomographic Technology- RTI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உட்புற சூழல்களின் விரிவான வரைபடங்களை உருவாக்கமுடியும்.
ஏற்கனவே நிறுவப்பட்ட உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதை நீக்குவதன் மூலம், மாறக்கூடிய,எடுத்துச் செல்லக்கூடிய அணுகுமுறையை உபிக்மேப் அறிமுகப்படுத்துகிறது. மீட்புப் பணியாளர்கள் எளிதாக அணியக்கூடிய டிரான்சீவர்களைப் பயன்படுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குழுவினர் நகரும்போது, இந்த சாதனங்கள் தாமாகவே அந்தந்த நிலைகளைத் தீர்மானித்து, தரை வரைபடத்தை அவ்வப்போது புதுப்பித்து, அப்பகுதியின் துல்லியமான மற்றும் நிகழ்நேர அமைப்பை வழங்குகின்றன. நீண்ட காலத்திற்கு, நவீன நகரங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கான அடித்தள தொழில்நுட்பமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது உபிக்மேப். சிக்கலான உட்புற சூழல்களில் மேம்பட்ட வரைபடமாக்குதலை இது செயல்படுத்துகிறது. சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அயோன் சக்ரவர்த்தி இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்தார். சென்னை ஐஐடி எம்எஸ் மாணவரான திரு. அமர்த்தியா பாசு, சென்னை ஐஐடி எம்.டெக் மாணவரான திரு. குஷ் ஜாஜல் ஆகியோரும் ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு இந்த தொழில்நுட்பத்திற்கு இந்திய காப்புரிமை கோரி விண்ணப்பம் அளித்துள்ளது.
இந்த ஆராய்ச்சி விவரங்கள் புகழ்பெற்ற இதழில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன-IEEE Transactions on Mobile Computing (DOI: https://ieeexplore.ieee.org/stamp/stamp.jsp?tp=&arnumber=10634790)
இத்தொழில்நுட்பத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அயோன் சக்ரவர்த்தி கூறும்போது, “பொது பாதுகாப்பு சம்பவங்கள், குறிப்பாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், துல்லியமான மற்றும் புதுப்பித்த உட்புற கட்டிடத் திட்டங்கள் இல்லாத சூழலில் பெரும்பாலும் தடைபடுகின்றன. வரைபடங்கள் கிடைத்தாலும் கூட, பேரிடர் காலங்களில் பயனுள்ள பணித் திட்டமிடலுக்கு அவசியமான நிகழ்நேர இயக்கவியலைப் பயன்படுத்த அவை பொதுவாகத் தவறிவிடுகின்றன. எங்கள் தொழில்நுட்பம் மீட்புப் பணியில் இருப்போருக்கு காட்சிப்பார்வை அல்லது விரிவான கணக்கீட்டு வளங்களைச் சார்ந்து இல்லாமல் உட்புற சூழல்களைப் படம்பிடிக்க வலுவான- எடுத்துச் செல்லக்கூடிய கருவியை வழங்குகிறது, சிக்கலான, காலத்தின் அருமைமிக்க சூழலில் விலைமதிப்பற்ற சொத்தாக இத்தொழில்நுட்பம் அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.