சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார் ஆணையர்

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 208 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 196 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 74 காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 168 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 646 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று

15.7.2021) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., (தெற்கு), திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), திரு.பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), திருமதி.பி.சி.தேன்மொழி,இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), ஆகியோர் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்க, இன்று (15.7.2021) வருகை தந்த 597 காவல் ஆளிநர்களுக்கு காவல் அதிகாரிகளால் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இன்று வர இயலாதவர்களுக்கு அவர்களது காவல் நிலையங்கள் மூலம் பதக்கங்கள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள்  மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.