2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடைபெறும் – இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 28.01.2022 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு  ஜும் ஆ தொழுகை நடத்தினர். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர், “தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு இன்று பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு தொழுகை தொடங்கியுள்ளது; இதற்காக தமிழக முதல்வருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹஜ் பயணிகள் வருகிற ஜூன் மாதம் 2022 அநேக கட்டுப்பாடுகள் தளர்ந்து பதிவு செய்த அனைவரும் இன்ஷா அல்லாஹ் மெக்காவிற்கு செல்வார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மசூதிகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு தொழுகைகள் நடைபெறும். தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2022 ஜூன் மாதம் இறுதியில் இருந்து ஹஜ் செல்லும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும். அதற்கான ஆயுத்த பணிகளும் நடைபெற்று வருகிறது.கொரோனோ நோய் தொற்றின் பயம் காரணமாக சில இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு செய்யாமல் உள்ளனர் அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியில்  இன்ஷா அல்லாஹ் தமிழகத்திற்கு ஹஜ் ஹவுஸ் கட்டப்படும் அதுவும் குறிப்பாக சென்னையில் கட்டப்படும்.அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் நிச்சயம் விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தனது செய்தியில் அறிவித்தார்.