ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர், டி.டி.எப் வாசன், அபிராமி, குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.******
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் கிருஷ்ணன் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள். இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை. எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது. இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.
இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ”ஐபிஎல்- இந்தியன் பீனல் லா- இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்… இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம். இது போன்றதொரு செய்தியைத் தான் ‘ஐபிஎல்’ படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

