5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல.  உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி தெரிவித்துள்ளார். பாசிஸ்டுகளை  வீழ்த்த முடியாததற்கு இ.வி.எம். மெஷின்தான் முழு காரணம் என ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டி ஒதுங்கிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஏழு ஆண்டுகளின் அனுபவங்களில் இருந்து பயனளிக்கும் வகையிலான எதையும் இந்த கட்சிகள் கற்றுக்கொள்ளவில்லை.பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் பாஜகவுடன் நட்புறவை பேணும் எண்ணத்துடன் மட்டுமே போட்டியிடுவது போலவே தெரிகிறது.  வலதுசாரி இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிராக இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று, அவர்களை இந்திய அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கி வைக்கத் தவறியதே பாஜகவின் வெற்றியை எளிதாக்கியதில் மிக முக்கிய காரணியாகும். 

நூற்றாண்டு பழமையான இந்திய தேசிய காங்கிரஸ் இன்றும் நாடு தழுவிய கட்டமைப்பையும், நாடு முழுவதும் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது, ஆனாலும் நாட்டில் புதிதாக உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தெளிவான தேர்தல் உத்திகளை திட்டமிடக்கூடிய திறமையான தலைமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.  மூர்க்கத்தனமாக வளர்ந்து வரும் பாசிசத்தை அடக்கி, அழிப்பதற்கான எந்த செயல்திட்டமும் இக்கட்சிகளிடம் இல்லை.

நாட்டில் உள்ள சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான செய்தியையும், கடினமான படிப்பினையையும் இத்தேர்தல் முடிவுகள் கொண்டுள்ளது.  அவர்கள் இன்னும் வாக்கு வங்கியாக மட்டுமே மதச்சார்பற்ற கட்சிகளால் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.  “மென்மையான இந்துத்துவா” என்பது பாஜக அல்லாத கட்சிகளால் இன்றும் பயன்படுத்தப்படும் அரசியல் தந்திரமாகும்.  இந்தக் கட்சிகளின் சில தலைவர்கள் வெளிப்படையாக கூறி வருவது போல், வலதுசாரி பாசிஸ்டுகளின் வன்மையான இந்துத்துவத்தை அழிப்பதற்கு, இக்கட்சிகள் கையாளும் மென்மையான இந்துத்துவ வழிமுறை தீர்வு அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்துகிறது. அடையாள அரசியலின் அவசியத்தை இம்முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.  சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள், ஓவ்வொரு தேர்தலின் போதும் இக்கட்சிகளின் மென்மையான இந்துத்துவ சங்கிலியில்  பிணைக்கப்படுவதையும், தங்களுடைய கட்சி வெற்றி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், அதனால் விளையும் பாதிப்புகளையும் உணர்ந்து, அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய அரசியல் இயக்கங்களை ஆதரிக்க முன்வர வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அளிக்கும் அடுத்த ஆபத்தான எதிர்மறை செய்தி என்னவென்றால், இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையினர் பேரழிவு தரும்  வகுப்புவாத மயமாக்கப்பட்டுள்ளனர் என்பதே ஆகும். மேலும் தங்களது மாநில (அல்லது) தேசத்தின் வளர்ச்சிக்கு பதிலாக, அபாயகரமான மதவெறியை விரும்பக் கூடியவர்களாக மாறியுள்ளனர் என்பதையும் காட்டுகிறது. உத்திரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எங்கு பா்த்தாலும் கேடு விளைவிக்கும், அழிவுகரமான, மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத செயல்களும்,  நடவடிக்கைகளுமே காணப்படுகின்றன.  கடந்த ஐந்தாண்டுகளில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாநில வளர்ச்சி பணிகளோ அல்லது மக்களுக்கு பயன்தரும் நலத்திட்டங்களோ எதுவும்  நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆனால் சங்பரிவார் ஐ.டி. கும்பல்கள் உ.பி மாநிலம் பிரம்மாண்ட வளர்ச்சி அடைவதாக சோஷியல் மீடியாவில் பொய், புரட்டுகளை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறது. மாறாக  இந்தக் காலக்கட்டத்தில்  மதவெறியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளும் மட்டுமே தொடர்ந்து  அதிகரித்து வளர்ந்துள்ளது. இவ்வளவு மோசமான செயல்பாடுகளுக்கு பிறகும், பெரும்பான்மையான உ.பி., மக்கள், அதே கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் மோசமான முன்னுதாரணமாகவும், எச்சரிக்கையாகவும் அமைகிறது.

பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், அதிகாரத்திற்கு ஆதரவாக இருப்பதை விட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தேசத்தை காப்பாற்றுவதற்காக ஒன்றுபட்ட வலுவான உத்திகளை திட்டமிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது. 

நாட்டில் உள்ள மதவெறியற்ற,  நடுநிலை சிந்தனையுடன் கூடிய பெரும்பான்மையினர் அனைவரும், இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்களிக்கும் மோசமானதொரு எதிர்காலத்தின் எச்சரிக்கைகளை உள்வாங்கி, நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்ட மக்கள் நலன் போற்றும் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் கைகோர்க்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகிறது.  வேற்றுமையில் ஒற்றுமையை பாதுகாக்கும் இந்தியாவையும், பாரபட்சமின்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையுடன் கூடிய இந்தியாவையும் கட்டமைக்க பாடுபட வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.