எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் . சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட காணொளிக் காட்சி மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.*******
இந்நிகழ்வில் இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, “‘மீரா’ படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் . இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன். ‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் . கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள். வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் . அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள் பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது, “இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு. நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.