சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78ன் படி அனைத்து வரிகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில்,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு நிபந்தனை விதிப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கே மாநிலங்களிடம் இருந்து தான் நிதியே கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் சொத்து வரி உயர்த்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது கண்டனத்துக்குரியது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது, சாமானியர்களை மேலும் கடுமையாக பாதிக்கும்.  

எனவே, சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை காரணமாக கூறி சொத்து வரி வரியை உயர்த்தாமல், ஒன்றிய அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் வருவாயில், சம அளவு வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.