விஜய் ஆண்டனி தயாரிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலனி, ட்ருப்டி ரவிந்திரா, செல் முருகன், கிரண் குமர், ஷோபா விஸ்வநாத், ரினி, ராயா சிது, மாஸ்டர் கேஷவ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சக்தி திருமகன். அதிகார வர்க்கத்தால் அனாதையாக்கப்பட்ட விஜய் ஆண்டனி சிறுவயதுமுதலே பழிதீர்க்கும் மனதுடன் வளர்ந்து வருகிறார். அரசு அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுக்கு டீ வாங்கித் தரும் பையனாக சேர்ந்து அதிகாரிகள் செய்யும் ஊழல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஏழைகளின் நிலைகளையும் கவனித்து வருகிறார். அவர் வளர வளர அவருடன் சேர்ந்து எப்படி ஊழல் செய்யலாம் ஏழைமக்களுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையும் வளர்கிறது. முடிவில் பெரியவனாகிய விஜய் ஆண்டனி ஒரு அரசியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி சுமார் 60 ஆயிரம் கோடிக்கு எப்படி அதிபரானார்? அரசியல் சாணக்கியனாக அறிப்யப்படும் வில்லனிடம் எப்படி சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. விஜய் ஆண்டனி இந்த மாதிரியான குற்றச் செயல் செய்து தன் காரியத்தை சாதிக்கும் கதாபாத்திரத்தை தனதுவழக்கமான நிதாதமான நடிப்பால் அசத்தியுள்ளார். முதல் பாதி முழுவதும் அரசியல் களம் சூடு பறக்கிறது. மாநிலம் முதல் மத்திய அரசு வரை தங்களுக்கு வேலை நடக்க தரகர்கள் எந்த அளவிற்கு பயன்படுகிறார்கள், அவர்கள் ராஜதந்திரம் என்ன என்பதை அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர் அருண் பிரபு. படம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்டப்படும் காட்சிகள் இக்காலத்து அரசியலை தொடர்புபடுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிடுக்கான தோற்றத்தில் மிரட்டியுள்ளார். படத்தின் இரண்டாம் பாதி விஜய் ஆண்டனி எல்லை மீறிய நடிப்பை தந்து ரசிகர்களை வியக்கவைக்கிறார். சினிமாவில் இலக்கணம் பார்த்தால் ரசிக்க முடியாது. அதனால் எல்லை மீறிய சினிமாத்தனம் அதிகமுள்ளது. வாகை சந்திரசேகர் வருவது பெரியாரிசம் பற்றி பேசுவது போன்ற முற்போக்கு கருத்துக்கள் எல்லாம் சிந்திக்க வைக்கும் காட்சிகள் பாராட்டைப் பெறுகின்றன. படம் ஆரம்பம் முதல் முடிவுவரை சலிப்புத்தட்டாமல் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு உட்கார வைக்கிறது. அண்மை காலங்களில் வந்த அரசியல் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் திரைப்படம் . விஜய் ஆண்டியின் 25 ஆவது படமாக சக்தி திருமகன் ஒரு நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட படமாக அமைந்திருக்கிறது.
“சக்தி திருமகன்” திரைப்பட விமர்சனம்
