கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள்

ரோனா வைரஸ் பெருந்தொற்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விட்டது. ஊரடங்கு பல பரிமாணங்களில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள் நிலைமைதான் பெரிதும் கவலை தருவதாக உள்ளது. வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக் காக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களோடு குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர். குழந்தைகள் சூழல் கைதி களாக உள்ளனர். இந்தியாவுக்கான யுனிசெஃப் பிரதிநிதி டாக்டர் யஸ்மின் அலி ஹாக், “லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களது வளர்ச்சி மற்றும் கற்றல் வாய்ப்புகளை இழந்து நிற்கின்றனர். பெருந்தொற்றுப் பரவல் குழந்தைகளின் தடுமாற்ற நிலைமையை வெளிக்காட்டியுள்ளது. வைரஸால் ஏற்படுவதைவிட அதனால் மறைமுகமாகவும் நீண்ட காலத்துக்கும் ஏற்படும் பாதகமான விளைவுகள்தான் குழந்தைகளைப் பாதிக்கும்,” என்கின்றார்.

யுனிசெஃப் அண்மையில் வெளியிட்டுள்ள தலைகீழாக்கப்பட்ட உயிர்கள்: 600 மில்லியன் தெற்காசிய குழந்தைகளின் எதிர்காலத்தை கோவிட்-19 எவ்வாறு அச்சுறுத்துகிறது?” (LIVES UPENDED) என்ற அறிக்கை இந்தியாவில் 247 மில்லியன் தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி பயிலும் குழந்தைகள், 28 மில்லியன் அங்கன்வாடிக் குழந்தைகள் மற்றும் கோவிட்-19க்கு முன்பே பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் 6 மில்லியன் குழந்தைகள் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர்”, எனக் குறிப்பிடுகின்றது. குழந்தைகள் ஊரடங்கின்போது கல்வி கற்க அரசு பல்வேறு விதமான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றது. மொபைல், தொலைக்காட்சி, போர்ட்டல், ஆன்லைன் என அனைத்து சாத்தியமான வழிகளிலும் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த யுனிசெஃப் அறிக்கை இந்தியாவில் சுமார் 24% வீடுகளில்தான் இன்டெர்னெட் இணைப்பு உள்ளதாகக் குறிப்பிடுகின்றது. மேலும் டிஜிட்டல் முறையிலான கற்றலில் ஆண்-பெண் பாலின வேறுபாடும் ஊரகம்- நகரம் வேறுபாடும் உள்ளன என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பள்ளிக்கூடம் சென்று கற்பதற்கும் டிஜிட்டலில் கற்பதற்கும் உள்ள இடைவெளியைக் குழந்தைகளால் அவ்வளவு சீக்கிரம் தாண்டிவிட முடியாது.

”ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா” என்றார் மகாகவி பாரதி. ஆனால் கொரோனாவும் ஊரடங்கும் குழந்தைகளை ”வீட்டுக்குள்ளேயே இரு பாப்பா நீ வெளியே வரக்கூடாது பாப்பா” என்று ஆக்கிவிட்டன. துறுதுறுவென்று இருக்கும் இயல்பு கொண்ட குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தல் போன்ற இந்தச் சூழல் அவர்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துள்ளது. இதில் இருந்து குழந்தைகள் மீள்வதற்குப் பெரியவர்களின் அக்கறையும் அரவணைப்பும்தான் உதவும். குழந்தைகளோடு குழந்தைகளாக இந்தச் சூழலில் இருக்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி, மொபைல் போன்றவற்றை கொடுத்து திசை திருப்பிவிடுகின்றனர். திரையிலேயே கண்களைப் பதித்துவிடும் குழந்தைகளுக்கு வளர்ச்சி சார்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தற்காலிகமாக குழந்தைகளிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக இவ்வாறு செயல்படும் பெற்றோர் தம் குழந்தைகள் இதனால் நெடு நாட்களுக்கான பாதிப்பைப் பெறுவார்கள் என்பதை மறந்துவிடுகின்றனர்.

இந்தச் சூழலில் தம் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்கு உதவும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அனைத்து விதமான கவலைகள் மற்றும் நெருக்கடிகளைத் தாண்டியும் இந்தக் குழந்தைகள் தங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதோடு ஒரு கலையிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இத்தகைய குழந்தைகளின் படைப்பாற்றல்தான் சமூகத்தைத் தேங்கிப் போகாமல் இயக்க நிலையில் வைத்திருக்கிறது. இந்தக் குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கும் கற்றுத் தருகின்றனர். இந்த உலகம் குழந்தைகளுக்கானது என்பதை. வீடு என்பது பள்ளிப்பாடம் படிக்கும் இடம் மட்டுமே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்தான் தங்கள் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு உதவுவார்கள்.

கவிஞரும் ஆரோவில் இளைஞர் கல்வி மைய இயக்குநருமான இரா.மீனாட்சி “கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் என்ன செய்கின்றார்கள் என்று பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். எங்கள் மையத்தைச் சேர்ந்த குழந்தைகள் நேரத்தைப் பயனுள்ள விதத்தில் போக்குகின்றனர். அவர்களின் படைப்பாற்றலுக்கு நாங்கள் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். ஒரு பெண் குழந்தை இந்த லீவ் காலத்தில் நான் எழுதப் படிக்கத் தெரியாத என் அம்மாவுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னது. குழந்தை ஆசிரியராகி விட்டது. குழந்தைகளை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார்.

நாடகக் கலைஞரும் புதுச்சேரியில் உள்ள லிசே பிரான்ஷே என்ற பிரெஞ்ச் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான முனைவர் எம்.எஸ்.காந்திமேரி,” கொரோனா வைரஸால் ஏற்பட்ட ஊரடங்கால் நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றோம். இந்தச் சூழலில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்று பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளை மடிக்கணினி, மொபைல், அலைபேசி ஆகியவற்றிடமிருந்து விடுவிக்க வேண்டும். குழந்தைகளுக்காக நாம் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிந்துகொண்டு உதவ வேண்டும் கதை சொல்லுதல், பாடுதல், நடித்துக் காட்டுதல் போன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். நாமே குழந்தைகள் போன்று ஆகி அவர்கள் உலகத்தில் இணைய வேண்டும். அப்போதுதான் அவர்களின்திறமைகள் சிறப்பாக வெளிப்படும்,” என்கிறார்.