ஜெர்மனியில் இருந்து வந்த போதை மாத்திரைப் பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது; மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது

உளவுத் தகவலின் அடிப்படையில், விமான சுங்கத்துறை அஞ்சல் நுண்ணறிவுப் பிரிவு, ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் இருந்து சென்னைக்கு வந்த, ஒரு தபால் பார்சலை, போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சோதனையிட்டது. பரிசோதனை நடத்தியதில், அந்தப் பார்சலில் வெளிர் மஞ்சள் நிற மாத்திரைகளும், சில இளஞ்சிவப்பு நிற மாத்திரைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மாத்திரைகளைப் பரிசோதித்த போது அவை MDMA (3,4-methylenedioxy-methamphetamine) என்னும் போதைப் பரவச மருந்தைக் கொண்டி ருக்கும் மாத்திரைகள் என்பது உறுதியானது. மொத்தம் 100 எம்டிஎம்ஏ மாத்திரை களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். அவை என்டிபிஎஸ் சட்டம் 1985-இன் (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அறுகோண வடிவிலான வெளிர் மஞ்சள் நிற மாத்திரைகள், ‘பிலிப்ப்ளின்’ என்னும் பிபி ஸ்கல் 2017 முதல் புழங்கி வருகிறது. இதில் 285 மில்லி கிராம் எம்டிஎம்ஏ-வும், ‘சிஎன்என்’ முத்திரை கொண்ட இளஞ்சிவப்பு மாத்திரைகளில் 225 மில்லி கிராம் எம்டிஎம்ஏ-வும் உள்ளது. இந்த மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பார்சலில் தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு முகவரி காணப்பட்டது. இந்த முகவரி குறித்து விசாரித்ததில், அந்தப் பொருளுக்குரிய முகவரியைச் சேர்ந்த நபர் பெங்களூரில் இருப்பதாகவும், ஊரடங்கிற்குப் பின்னர் அவர் இங்கு வரவில்லை என்றும் அந்த முகவரியில் வசித்து வரும் அவரது தாயார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை மற்றும் பெங்களூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய தேடுதலில், அந்த நபரின் இருப்பிடம் கொரமங்கலா என்னும் வசதியுள்ளவர்கள் வாழும் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டு, சாலை வழியாக சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள கவிகுமார் (வயது 25), மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டம் பெற்ற அவர், பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் தர ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். என்டிபிஎஸ் சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட்டு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எம்டிஎம்ஏ என்பது பரவசமூட்டும் ஒரு மருந்தாகும். ரசாயன ரீதியில் மயங்கிய போதை நிலையைத் தூண்டுவதுடன், உணர்வுகளையும் தூண்டி, ஒரு வகையான இன்பநிலை ஆற்றலைத் தரக்கூடியது எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளில் எம்டிஎம்ஏ அதிகமாக இருப்பதால், அது மிகுந்த ஆற்றலுடையதாகும். 120 மில்லி கிராமுக்கு மேல் சென்றால், இறப்பு நேரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. முன்னதாக, மார்ச் மாதத்தில், ரூ.30 லட்சம் மதிப்பிலான இந்த வகை மாத்திரைகள் சென்னை வெளிநாட்டு அஞ்சலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, மைசூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். போதை மருந்து பறிமுதல் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் திரு. ராஜன் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.