சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில்  32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து,  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சுற்றுலாத்துறைஅமைச்சர் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான திருக்கோவில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கான திருமணவிழாவினைத் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2025-2026-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை அறிவிப்பில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி ஒவ்வொரு இணை ஆணையர்  மண்டலத்திலும் 50 இணைகளுக்கு திருக்கோவில்களின் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 20 இணைகளுக்கு, இன்றையதினம் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் இணை ஒன்றுக்கு ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகள் (4 கிராம் தங்கதாலி உட்பட)  வழங்கி திருக்கோயில்கள் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், புதுமண தம்பதியினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 4 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், கைக்கடிகாரம், பூஜை பொருட்கள், கட்டில், பீரோ, மெத்தை, மிக்ஸி மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட 31 வகையானசீர்வரிசைகளுடன் திருமண விழா நடத்திவைக்கப்பட்டுள்ளன. இத்திருமண விழாவில் மணவாழ்வினைத் தொடங்கும் தம்பதியினர் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,  சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம,  துணை மேயர்  மா.சாரதாதேவி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, அறங்காவலர்கள் குழுத்தலைவர் வள்ளியப்பா, உதவி ஆணையர்கள் ராஜா, வி.அம்சா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.