தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் பொருளாதார சுதந்திரம் காண வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் முதன் முறையாக1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்து முதலமைச்சர், உள்ளாட்சி துறையின் அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோது மாவட்டந்தோறும் சென்று லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் தொடங்கி வைத்து, பொருளாதார கடன், சுழல் நிதி கடன் உள்ளிட்டவற்றை வழங்கி பெண்கள், வங்கிகளுக்கு தன்னம்பிக்கையுடன் சென்று தாங்களே வங்கிப் பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு உயர்த்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 1,49,767 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் 53,74,000 உறுப்பினர்களுடன் 4,76,000 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 19,12,927 குழுக்களைச் சேர்ந்த 2,48,68,051 உறுப்பினர்களுக்கு 1,20,240 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 10,51,976 மகளிருக்கு 5,125.33 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு, மகளிர் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றார்கள். சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 16 மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 1 முதியோர் குழு சுய உதவிக் குழு, 1 மாற்றுத்திறனாளி சுயஉதவிக் குழு என மொத்தம் 18 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 246 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு நிர்வாக பயிற்சிகளும், வேலைவாய்பு பயிற்சிகளும் அளிக்கபட்டு வேலைவாய்ப்புகள் பெற்றுவழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன. குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது இவ்வூராட்சியில் குழு உறுப்பினர்கள் கரும்பு விவசாயம், பூந்தோட்டம், காய்கறி சாகுபடி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்களும், கறவை மாடு, ஆடு வளர்ப்பு, தையல், துணி வியாபாரம் செய்தல் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ச.உமா, மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.