தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரபிரபா, விருதுநகர் தொகுதியில் கணேசன், அருப்புக்கோட்டையில் சேதுபதி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி இந்த தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அமைச்சராக இருக்கும்போது என்னை சந்திக்கும் போதெல்லாம் இந்த தொகுதி நலன் சார்ந்த கோரிக்கை வைப்பார். ராஜவர்மன் சட்டமன்றத்தில் மக்களுக்கு குரல் கொடுப்பவர், திருமதி சந்திரபிரபா தொகுதிக்கு பல திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தவர், கணேசன் புதியவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர், சேதுபதி நகரச் செயலாளர், எப்போதும் மக்களுக்காக ஓடோடி
வருவார். ஐந்து வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து
வெற்றி பெற வையுங்கள்.தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ராஜபாளையம் தொகுதியில் பிரிசில்லா பாண்டியன்
போட்டியிடுகிறார். ஜான் பாண்டியன் நம் கூட்டணியில் பலமுறை அங்கம்
வகித்தவர், அவரும் மக்களுக்காக சேவை செய்பவர். அவருக்கும் தாமரை
சின்னத்தில் வாக்களியுங்கள். சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு
தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.சிவகாசி என்றால் ஞாபகம் வருவது பட்டாசு தொழில். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்றது. சிவகாசி பட்டாசு உலகளவில் விற்பனையாகிறது. தீப்பெட்டி தொழிலும் இப்பகுதியில் சிறப்பாக
செயல்படுகிறது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தது, நான் முதல்வராக
இருந்தபோது 20 எம்.பிக்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை
சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை கொடுத்தோம்.
பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடிய அரசு அதிமுக அரசு.
இந்த தொழிலில் பல லட்சம் பேர், தீப்பெட்டி தொழிலில் பல்லாயிரம்
பேர், விவசாயிகள் மற்றும் அச்சகத் தொழிலாளிகளும் உள்ளனர். மீண்டும்
அதிமுக ஆட்சி அமைந்தால் இந்தத் தொழில்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி குண்டாறு திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை கால்வாய் வெட்டி
ஏரிகள் குளங்கள் நிரப்பி, வேளாண்மைக்கு தேவையான நீர் கொடுக்கும் திட்டம்.
திட்டமிட்டு திமுக முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த
திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டது, நானே அடிக்கல் நாட்டினேன். இதை நிறைவேற்றும் போது
ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மீண்டும் இத்திட்டம் நிறைவேறூம் விருதுநகர்
மாவட்டம் பசுமையாக காட்சியளிக்கும். திமுக விவசாயிகள் விரோத அரசு
என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.
400 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து
சாதனை படைத்தோம். உயர்தர சிகிச்சை அளிக்கும் கருவிகள் வாங்கினோம்.
திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. கொண்டுவந்தது அதிமுக, காலதாமதமாக்கித்
திறந்தது திமுக. ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகூட திமுக கொண்டுவரலை.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கொண்டுவந்தோம், இந்தியாவிலேயே வரலாறு கிடையாது. அம்மா
இருக்கும்போது 6 மருத்துவக் கல்லூரி, ஆக மொத்தம் 17 மருத்துவக் கல்லூரி
கொண்டுவந்தோம். அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக 7.5% இடஒதுக்கீடு கொண்டுவந்து இன்று 3 ஆயிரம் பேருக்கு மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்தோம். அவர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாது
என்பதால், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அனைத்து கல்விக் கட்டணத்தை
அரசே செலுத்தும் என்று அறிவித்தேன். இப்படி ஒரு திட்டமாவது திமுக
செய்திருக்கிறதா..? சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது. சிறுமி முதல் பாட்டி வரை
பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர
டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் ஆள்கிறார். சட்டம் ஒழுங்கு
சிறப்பாக இருந்தால்தான் நாடு சிறப்படையும். திமுகவுக்கு குடும்பம் பற்றி தான்
சிந்தனை. ஸ்டாலின் அரசு தொடர வேண்டுமா? பலமுறை நான் பேசிவிட்டேன்
ஆனால் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. நீதிமன்றம் போனோம், நீதிமன்றம்
உத்தரவிட்டும் நியமிக்கவில்லை. இப்படிப்பட்ட மோசமான அரசு தேவையா?
எங்கே பார்த்தாலும் போதைப் பொருள். கஞ்சா எங்கும் விற்கிறது.
மாத்திரை, சாக்லேட், திரவம் என பல ரூபத்தில் வருகிறது. மாணவர்கள்,
இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை நான் பேசிவிட்டேன் ஆனால்
கண்டுகொள்ளவில்லை. குழந்தைகள் நம் கண் முன்னே சீரழிகிறார்கள். இதை
தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சி மலர வேண்டும். மூன்றே மாதத்தில் கஞ்சா
முழுவதும் தமிழகத்தில் ஒடுக்கப்படும் அதிமுக ஆட்சியில். எங்கும் கஞ்சா
இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுப்போம். டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ஓ போட்டுக்கொண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஏனெனில் கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. இரண்டு வயது குழந்தையையும் விட்டுவைக்கவில்லை. ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதுதான்
இதற்குக் காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
நான் வரும்போது குழந்தைகள் இந்த பனியன் காட்டினார்கள். இதில்
என்ன எழுதி இருக்கிறது என்று பாருங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி தான்
பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம் என்று
எழுதப்பட்டுள்ளது. நான் ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது
குழந்தைகள் இதை எழுதி என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும்,
நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள் என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட
பிரச்னை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப்பார்த்து அதிமுக
கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
