தங்க முகையதீன்
————
தாம்பரம். ஜன.17- சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சைஜூ தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றுக்கொண்டு, சில நாட்களுக்கு பிறகு, அப்பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார், அவமானத்திற்கு அஞ்சிய அந்தப் பெண், இதுவரை சுமார் ரூ. 1,60,000 தொகையை ஆன்லைன் மூலம் சைஜூவிற்கு அனுப்பியதாகவும், எனினும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய சைஜூ பணம் தராவிட்டால்; அப்பெண்ணின் அந்தரங்க காணொளியை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளார். ஆணையரின் உத்தரவின் பேரில், தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்த சைஜூவைக் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை செய்தபோது இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஐர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பொதுமக்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்தும் போது மிகுந்த விழிப்புணர்வுடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களையோ, புகைப்படங்களையோ பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்

