சிவகங்கை மாவட்டம், மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.94 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றமைக்காக திருப்பத்தூர், நாகப்பா, மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, சிவகங்கை மாவட்ட மாணவச் செல்வங்களுக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில் :- ”கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்” என். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடமிருந்து சிறந்த பண்பு நலன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை எதிர்கால சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த மனித சக்தியாக மாற்றுவதே கல்வியின் அடிப்படை நோக்கமாகும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவதற்கும் ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த சீரிய வளர்ச்சியினை அடைவதற்கும் தேவையான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் கற்றல் திறனை உறுதி செய்திடும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகள், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான சீரிய பயிற்சிகள், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், குறிப்பாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், அதிகவேக இணைய வசதிகளுடன் கூடிய திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குதல் போன்ற முன்னோடித் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது.
நமது தமிழ்நாடு முதலமைச்சரின் உயரிய நோக்கமான “எல்லார்க்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்வதுடன், கல்விசார் செயல்பாடுகளுடன் உடல்நலக் கல்வி, விளையாட்டு, பள்ளி மன்றச் செயல்பாடுகள், அறிவியல் கண்காட்சிகள், கலைத் திருவிழாக்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியினையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்துகிறது.
உலகிற்கே முன்னோடியான ”முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம். போன்ற மாணவர்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னோடித்திட்டங்கள் மூலம் கல்லாதோர் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று சிவகங்கை மாவட்ட மாணவச் செல்வங்கள் சாதித்திருக்கிறார்கள். அத்தகைய சாதனையை புரிந்து, தமிழ்நாட்டு அளவில் முதன்மையான மாவட்டமாக கல்வி வளர்ச்சியில் நம்முடைய மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்கள். அதற்கு பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள், எல்லாவற்றிற்கும் மேலான மாவட்ட ஆட்சியர் ஆகிய அனைவரையும் மனதார வெகுவாக பாராட்டுகிறேன்.
சென்ற ஆண்டு (2024) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் இரண்டிலும் இரண்டாம் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆறாமிடத்தை பெற்று மனச்சோர்வு தந்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பெற்று மனச்சோர்வு அனைத்தையும் போக்கி மட்டற்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் அளித்துள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.49 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்பதையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனைவரையும் பாராட்டுகிறேன். இம்மகிழ்ச்சி தொடர்ந்து நீடித்திட வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.