2026 சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பிரச்சாரத்தை – பரப்புரையைத் தொடங்குகிறேன்.
திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர். அதனால் நான் இங்கிருந்து தொடங்குகிறேன். இந்த மேடையில் இருக்கும் இவர்கள், உங்களின் நன்மதிப்பை வாக்குகளாகப் பெற்று, எம்.எல்.ஏ.க்களாக, 17-ஆவது சட்டப்பேரவைக்குள் நுழைய இருக்கும் நம்முடைய வெற்றி வேட்பாளர்கள்.திருவாரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, திருவாரூர் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறிமுகமான, இன்னும் சொன்னால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினராக இருக்கும், மாவட்டச் செயலாளர் – நம்முடைய அருமைச் சகோதரர் பூண்டி கலைவாணன் களமிறங்குகிறார். தலைவர் கலைஞர் மறைந்த பிறகு, கலைவாணன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வாக்களித்து, வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறையும், நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் திருவாரூர் மக்கள் உங்களின் வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.அடுத்து, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், மன்னையில் பிறந்து – சென்னையின் கோட்டையிலிருந்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ள நம்முடைய தம்பி டி.ஆர்.பி. ராஜா களமிறங்குகிறார். நம்முடைய டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் மன்னார்குடி மக்கள் உங்களின் வாக்குகளை அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.திருத்துறைப்பூண்டி தொகுதியில் நமது கொள்கைக் கூட்டணியின் பலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியான தோழர் மாரிமுத்து அவர்கள் களமிறங்குகிறார். அவரைப் பொறுத்தவரை, களத்தில் மட்டுமல்ல; கடந்த முறை சட்டமன்றத்திலும் சிறப்பாகச் செயல்பட்டவர். அப்படிப்பட்ட நம்முடைய தோழர் மாரிமுத்து அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டி மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் – நம்முடைய அன்புக்குரிய சகோதரர் முகமது முபாரக் அவர்கள் களமிறங்குகிறார். சகோதரர் முகமது முபாரக் அவர்கள் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம்மில் ஒருவர். களத்தில் அவருக்காக கடுமையாகப் பாடுபட்டு வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொரு தி.மு.க.வினரின் கடமை. நம்முடைய முகமது முபாரக் அவர்களுக்கு, நன்னிலம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.இந்த நான்கு பேரையும், உங்களின் பிரதிநிதிகளாக – உங்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க, உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். இன்னும் சொன்னால், தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… அன்போடும் – உரிமையோடும் கேட்கிறேன்… வெற்றி உறுதியா!இந்த நான்கு பேருக்கும் நீங்கள் தரப்போவது வெற்றி! அது உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் இருக்கையில் அமரலாம்.இப்போது நீங்கள் சொன்ன உறுதிபோன்றே, நேற்று மாலை, கொள்கை உறவாக நம்முடன் இணைந்திருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதை முடித்துவிட்டுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.
திருவாரூர், பெயரே அழகு; அதைவிட, திருவாரூர் தேர் பேரழகு! நேற்று முன் தினம்தான் திருவாரூர் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னமும்கூட அந்த உற்சாகத்தை உங்களிடம் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட, புகழ்பெற்ற ஆழித்தேர், 1948-க்கு பிறகு, 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்தது. திருவாரூரில் வளர்ந்து, திருவாரூரை வளர்த்தெடுத்த தலைவர் கலைஞர் அவர்கள், தேர் செல்லும் பாதையைச் செப்பனிட்டு, 1970-இல் ஆழித்தேரை ஓட வைத்த தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்தோமோ, அப்போதெல்லாம் திருவாரூருக்காக நிறைய செய்திருக்கிறோம். அதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏன், திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியதே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! ஆட்சியர் அலுவலகம் – நீதிமன்ற அலுவலகம் – நகராட்சிக் கட்டடம் – மாவட்டக் காவல் அலுவலகம் – புதிய பேருந்து நிலையம் – இவ்வாறு அனைத்தையும் அமைத்தவர், தலைவர் கலைஞர்!திருவாரூரில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்!2010-இல் மருத்துவக் கல்லூரி! மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி! பாமணி உரத் தொழிற்சாலை! மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி! இங்கிருக்கும் நம்முடைய டி.ஆர். பாலு அவர்கள் முயற்சியால், செம்மொழி எக்ஸ்பிரஸ் உட்பட ஐந்து புதிய ரயில்கள் வந்தது! மன்னையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் கழகத்தின் முயற்சியால்தான்!
திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின்
