ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு

இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்திலும்; கோவை, மதுரை ஆகியவற்றில் உள்ள அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வு, ஜூனில் நடக்க உள்ளது. இவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, கடந்த 23ல் நடக்க இருந்தது; ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் பயிற்சி நிலையங்கள் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.எனவே, ஒத்தி வைக்கப்பட்ட நுழைவுத் தேர்வு, வரும் 27ல் நடத்தப்படும். நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் வழியே விண்ணப்பித்தவர்கள், வரும் 21 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை, பயிற்சி மைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்படும். அவ்வப்போது அறிவிக்கப்படும் விபரங்களை, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.