கண்ணன் ரவி, தீபக் ரவி ஆகியோரின் தயாரிப்பில், உமாபதி எஸ் ராமைய்யா இயக்கத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டி.என்.2026″ (அதாவது தமிழ்நாடு 2026) தங்க நட்சத்திரம்”. பொள்ளாச்சியில் ஜமின்தாராக இருக்கும் தம்பி ராமைய்யா, எம்.ஜி.ஆரின் அதிதீவிரமான ரசிகர். அப்போது வட இந்தியாவிலிருந்து வந்த நட்டி நட்ராஜ் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தைப் பார்த்த ரெடின் கிங்ஸ்லி, “நட்டி நட்ராஜ் எம்.ஜி.ஆர். போலவே நடிக்கிறார்” என்று தன் முதலாளியும் எம்.ஜி.ஆரின் ரசிகருமான தம்பி ராமைய்யாவிடம் சொல்கிறார். அந்த படத்தைப்பார்த்த தம்பி ராமைய்யாவும், நட்டி நட்ராஜை பல படங்களில் கதாநாயகான நடிக்க வைத்து எம்.ஜி.ஆர் போல தமிழ் நாட்டின் தங்க நட்சத்திரமாக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதன்படி நட்டி நட்ராஜும் பல தமிழ் படங்களில் நடித்து தமிழகத்தின் முன்னணி நடிகராக பரிணாம வளர்ச்சியடைகிறார். பிறகு நட்டி நட்ராஜிடம் “உங்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் அடுத்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் நீங்கள்தான்” என்று தம்பி ராமையா தூபம் போடுகிறார். நட்டி நட்ராஜும் முதலமைச்சர் பதவி ஆசையில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். அக்கட்சிக்கு ஆதரவாக தம்பி ராமைய்யாவுடன் எம்.எஸ்.பாஸ்கரும் இளவரசும் கைகோர்க்கிறார்கள். திட்டமிட்டபடி நட்டி நட்ராஜ் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனாரா? இல்லையா? என்பதுதான் கதை. படதின் ஆரம்பத்தில் குல்கந்த் குமாராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் ரஜினிகாந்தை பிரதிபலிக்கிறார். ஆரம்பகாலத்தில் ரஜினிகாந்தின் தமிழ் உச்சரிப்பு எப்படி இருந்த்தோ அதே உச்சரிப்பைத்தான் நட்டியும் செய்கிறார். ஆரம்பத்தில் படபிடிப்பு நிலையத்துக்கு ரஜினிகாந்த் வருவதற்கு கார் அனுப்ப மாட்டார்கள். நடந்துதான் வருவார் அல்லது சைக்கிளில் வருவார். அதை நட்டி நட்ராஜ் நினைவுபடுத்துகிறார். பிறகு உயர்ந்த அந்தஸ்து அடைந்ததும் நடிகர் விஜய்யின் பிரதிபலிப்பாக நட்டி நட்ராஜ் கொட்டித் தீர்க்கிறார். ஏன்? விஜய்யாகவே நடிக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் காலகட்டத்தில் இப்படத்தை ஒரு அரசியல் நகைச்சுவை படமாக தம்பி ராமைய்யாவின் கதைக்கு அவரது மகன் உமாபதி ராமய்யா உயிரோட்டம் கொடுத்துள்ளார். மாவிலை தோரணம்போல நகைச்சுவை தோரணம் கட்டி திரைக்கதையை அலங்கரித்துபிருக்கிறார்கள். திருநெல்வேலி தமிழில் எம்.எஸ்.பாஸ்கர் பேசியிருப்பது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த நகைச்சுவையாகும். அரசியலில் தற்போது விஜய்யின் நிகழ்வுகளை தொட்டுத்தொட்டுமட்டுமல்ல, புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமைய்யா. விஜயின் மனைவியையும், நடிகை திரிஷாவையும் மணிவண்ணனையும் சங்கலித்தொடராக நட்டிநட்ராஜின் நிழலாக வந்துபோக வைத்துவிட்டார் இயக்குநர் உமாபதியும், எழுத்தாளர் தம்பி ராமைய்யாவும். இளவரசனும் ரெடின் கிங்ஸ்லியும் படத்தின் நகைச்சுவைக்கு துணையாக இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்தப் படம் அரசியல் நய்யாண்டி மேளமும் நாதஸ்வரமும்.
“டி.என்.2026” திரைப்பட விமர்சனம்
