“லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்பட விமர்சனம்

நயன்தாரா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஷாரா, ஆனந்தராஜ், மாளவிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”. 2040 ஆம் ஆண்டில் மனிதர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்றும் விஞ்ஞான வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் கற்பனையில் உதித்த கதைதான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”. எஸ்.ஏ.சூர்யா ஒரு தலை சிறந்த விஞ்ஞானி. அவர் ஒரு இணையதளத்தை உருவாக்கி, காதலிப்பவர்கள் தங்களது காதல் அனுபவம் மற்றும் காதலிக்கும்போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யச் சொல்கிறார். அப்படி பதிவேற்றம் செய்தவர்களின் மனநிலை 60 விழுக்காடுக்கு மேல் அதிகம் இருந்தால் காதலை தொடரலாம் என்றும், அதற்கு குறைவாக விழுக்காடு இருந்தால் அவர்களின் காதல் நிறைவேறாது அதனால் காதலை முறித்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த இணையதளம் சொல்லிவிடும். இந்த இணையதளத்தில் ஆயிரக்கணக்கான காதலர்கள் தங்களது காதல் அனுபவத்தை பதிவேற்றம் செய்கிறார்கள். அதில் ஒரு காதலர்கள்தான் பிரதீப் ரங்கநாதனும் அவரது காதலி கிரித்தி ஷெட்டியும். இவர்களின் காதல் வெறும் 3 சதவிகிதம்தான் என்று அந்த இணைதளம் சொல்கிறது. இதனால் விரக்தியடைந்த பிரதீப் ரங்கநாதன் ஆத்திரமடைந்து, விஞ்ஞானி எஸ்.ஏ.சூர்யாவிடம் “நீங்கள் கண்டுபிடித்த இந்த இணையதளம் பொய்யானது. மனிதனுடைய இதயத்தை குறிப்பாக காதலை ஒரு எந்திரம் தீர்மானிக்க முடியவே முடியாது. காதலின் உணர்வுகளை எந்திரம் எப்படி அறிந்து கொள்ளும்.” என்று சண்டையிடுகிறார். அத்துடன் “நான் என் காதலை தொடர்ந்து என் காதலி கிரித்தி ஷெட்டியை திருமணம் செய்து உங்கள் இணையதளம் பொய்யானது என்று நிரூபிப்பேன்” என்றும் சவால் விடுகிறார். அந்த சவாலில் பிரதீப் ரங்கநாதன் வெற்றியடைந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. கதை வித்தியாசமானதுதான். இதுவரைக்கும் இப்படி ஒரு திரைக்கதை வந்ததில்லை. ஆனால் கதையோடு பார்வையாளர்கள் ஒன்றிப்போகவில்லை. படத்தொகுப்பு குழப்பமடையச் செய்கிறது. ஒளிப்பதிவு பிரமாதமாக இருக்கிரது. பின்னணி இசை பார்வையாளர்களை தளரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. ஹாலிவுட் படம் போல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  பிரதீப் ரங்கநாதனின் எதார்த்த நடிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.  மொத்தத்தில் இந்த படம் விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனித உணர்வுக்கும் இடையே நடக்கும் போர்களம்.