“கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன்” – ஆர்யா

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது..  ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இப்ப்டத்தின் முன்னறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசும்போது கூறியதாவது: “கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத்  தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன் தான், இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்று சொல்லலாம். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம்.*****

இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச்  சென்றபோது கூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.. இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ்.. இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதே எடிட்டர் பிரசன்னா தான். படத்தின் முதல் காப்பி பார்ப்பது அவர்தான். நான் இயக்குநரிடம் கேட்பேன் பிரசன்னா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா அந்த மாதிரி ஒரு சிறப்பான எடிட்டர் நமக்குத் தேவை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன் சார் தான். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப்  படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார். நீங்கள் படம் பார்த்து பிறகு கௌதமை தான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் மே மாத வெயிலிலும் அதை பெரிது படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள் என்று சொன்னால் என் கேரக்டர் சிரிக்காதே சீரியஸாகத் தானே இருக்கும் என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார் நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்: என்று கூறினார்.