அரிய வகை உடும்புகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பெட்டிகளில் 229 பச்சை நிற உடும்புக் குட்டிகள், 113 ஆரஞ்சு நிற உடும்புக் குட்டிகள், 7 மஞ்சள் நிற குட்டிகள், 53 நீல நிற குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இவை அனைத்தும் உடும்புக் குட்டிகள் என்பதை  தென்மண்டல வனவிலங்குப் பிரிவு ஆய்வாளர்  திரு டோகி ஆதிமல்லையா உறுதிசெய்தார். மொத்தம் கடத்தி வரப்பட்ட 402 உடும்புக் குட்டிகளில் ஏற்கனவே 67 இறந்து விட்டன.  கைப்பற்றப்பட்ட இந்தக் குட்டிகள் வேளச்சேரியில் புளு கிராஸ் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டன.  இவற்றை கடத்தி வந்த பயணி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.