தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர்.

தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த உலக நாடுகளின் அரசுகள், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களின் அடக்குமுறைக்கு ஆதரவாக நிற்க கூடிய மோடி அரசு,  கொரோனா பெருந்தொற்று பொது முடக்கக் காலத்தை பயன்படுத்திக் கொண்டு, உழைக்கும் மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மீது தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதன் மூலமும், தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமையின் மீது தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

எனவே, இந்த நெருக்கடி நிலையில், தொழிலாளி வர்க்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை தொடுக்க முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுப்பணிகளில் மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்து வருவதோடு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. அதேபோன்று, தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.  தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தான், எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதோடு, தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரணாக நிற்கும் என்பதை இந்த மே நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.