“கேம் ஆப் லோன்” திரைப்பட விமர்சனம்

ஜீவநாதன் தயாரிப்பில் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் அபிநய் கிங்கர், நிவாஸ் ஆதித்தன், எஸ்தர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கேம் ஆப் லோன்”. கொரோனா காலக்கட்டத்தில் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். சூதாட்டத்தில் தோற்றுப் போன நிவாஸ் ஆதித்தன் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதாளத்தின் மூலம் மிக எளிதாக கிடைக்கும் கடனை பெறுகிறார். கடன் வாங்கி விளையாடிய அத்தனை பணத்தையும் இணையதள சூதாட்டத்தில் ஆடி தோற்றுப் போகிறார். கடன் தொகையை வசூலிக்க கடன் கொடுத்த நிறுவனம் பணம் வசூல் செய்யும் முகவரான அபிநய்யையும் அவருக்கு உதவியாக  ஒருவரையும் அனுப்புகிறது. அப்போது வீட்டில் நிவாஸ் ஆதித்தனின் மனைவி எஸ்தர் இருக்கிறார். அப்போது வீட்டுக்குள் திடீரென நுழைந்த அவ்விருவரும் அமைதியான முறையில் அலட்டிக் கொள்ளாமல் சமையலறையில் சமைப்பதும், நடுவீட்டில் சிறுநீர் கழிப்பதும், சூதாடுவதும், மது குடிப்பதுமாக  இருக்கின்றார்கள். இதைப்பார்த்த எஸ்தர் “நீங்க யார்? வெளியே போங்கள்”  என்று கூறுகிறாள். “எங்களிடம் உனது கணவர் கடன் வாங்கி இருக்கிறார். அதை திருப்பி கொடுத்துவிட்டால் போகிறோம்” என்று சொல்கிறார்கள். கடனை நிவாஸ் ஆதித்தனால் திருப்பிக் கொடுக். முடியவில்லை. அதனால் நிவாஸ் ஆதித்தனை தற்கொலை செய்து கொள்ளும்படி அபிநய் மூளைச்சலவை செய்கிறார். கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை ஏன் தற்கொலை செய்யச் சொல்கிறார்?. கடன் வாங்கிய நிவாஸ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதுதான் கதை. இப்படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல, கடன் வாங்குபவர்களுக்கு ஒரு பாடத்தை திரையில் நடத்தியுள்ளார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. சத்தமின்றி ரத்தமின்றி கொலை செய்யும் தந்திரத்தை மூளச் சலவை செய்யும் அபிநய்யின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. கடன்பட்டவர்களின் மனநிலையை தன் உடல்மொழியால் தத்ரூமமாக பிரதிபலிக்கிறார் நிவாஸ் ஆதித்தன். எஸ்தரின் வருகை குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்து முடித்திருக்கிறார். இருவர் மட்டும் படுத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு சிறிய படுக்கையறை, ஆகச்சிறிய சமையல்கட்டு, அதற்கேற்றார்போல் அமர்ந்து கொள்ளும் ஒரு சிறிய கூடம். இந்த குறுகிய வீட்டுக்குள் தனது காமிரா கண்களை படரவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சபரியை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தை எந்த ஒரு பகுதியையும் தொய்வில்லாமல் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஜெனிபர். படத்திற்கு தகுந்தாற்போல் தாளம் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜாய் கோஸ்டா. இப்படத்தை பார்த்த பிறகு யாரும் கடன் வாங்க தயங்குவார்கள் என்பது திண்ணம். ஒரு விழிப்புணர்வு பாடத்தை வெள்ளித் திரையில் நடத்தியிருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி.