தங்க முகையதீன்
—————–
சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில். மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், கலைமாமணி சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வித் லவ்”. குடும்பத்தினர்களால் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட அபிஷன் ஜீவிந்த்தும் அனஸ்வராவும் திருமணத்துக்கு முன் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன்படி உயர்நிலை பாடசாலை மாணவனாக இருந்தபோது காவியா மீது காதல் ஏற்பட்டதாகவும், அதை சொல்ல பயந்து அப்படியே விட்டுவிட்டதாகவும், இப்போது அந்த காவியா வேரொருவரின் மனைவி என்றும் சொல்கிறார். அதேபோல் அனஸ்வராவும், தன்னுடன் பாடசாலையில் படித்த சச்சின் நாச்சியப்பனை காததலித்ததாகவும் பிறகு பிரிந்து விட்டோம் என்று சொல்கிறாள். இருவரும் தங்களின் முதல் காதலர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசைப்படுகிறார்கள். இருவரும் தங்களின் முதல் காதலர்களைத்தேடி சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்கிறார்கள். தங்களின் முதல் காதலர்களை அவர்கள் சந்தித்தார்களா? இல்லையா? ஒப்பந்தப்படி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் கதை. பொதுவாக திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும் தங்களது பாடசாலை காதலை மறைப்பார்கள். ஆனால் அதை மறைக்காமல் திருமணத்துக்கு முன் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது சாத்தியமாகுமா? நினைக்க வேண்டியதை நினைக்க வேண்டும். மறைக்க வேண்டியதை மறக்க வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாகும். தம்பதிகள் இருவரும் ஒன்றாக இணையும்போது, “ஒருகாலத்தில் இவள் வேரொருவனை காதலித்தவள்தானே” என்று கணவனுக்கு நினைவு வந்தாலோ அல்லது ஒரு காலத்தில் இவன் வேரொருத்தியை காதலித்தவன்தானே என்று மனைவிக்கு நினைவு வந்தால் என்னவாகும்?. ஏனென்றால் காதல் தோல்வியடையலாம். ஆனால் காதல் உணர்வுகள் தொடருமேதவிர அதற்கு தோல்வியில்லை. அதனால்தான் மறைக்க வேண்டியதை மறக்க வேண்டும். அதன்படி பார்த்தால் இக்கதையின் கருவே குற்றமாகும். இப்படத்தில் கதாநாயகான நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த், டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய இயக்குநர் ஆவார். காதல் உணர்வுகளையும் தோல்வியின் தோற்ற முகத்தையும் தத்ரூபமாக காட்டி அருமையாக நடித்துள்ளார். நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இசை படத்தின் ஓட்டத்திற்கு தாளம் போட்டிருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

