காமன் வெல்த் போட்டியில் வென்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய முதல்வர்

விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகதமிழ் நாட்டை உருவாக்கிட, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்தவகையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்கும்
போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி
மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு 30 இலட்சம்
ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையையும், ஆண்களுக்கான
மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் விடுதி மாணவரும், அரசு
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டின்படி
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணிபுரிந்து
வருபவருமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் திரு.பிரவீன்
சித்திரவேல் அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான
காசோலையை அவரது தந்தை திரு. எஸ். சித்திரவேல் அவர்களிடமும்,
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம்
வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் விடுதி
மாணவரும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான திரு. செல்வ பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.