தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு விழாவில் பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டு விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறுதுறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ.வேலு அவர்களே! முன்னிலை ஏற்றுள்ள மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களே! நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.நாசர் அவர்களேதுணை மேயர் மகேஷ் அவர்களே! வருகை தந்துள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களேதலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்களே ! துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று அமர்ந்திருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு.தீரஜ்‌ குமார்‌, இ.ஆ.ப., அவர்களேதமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் திரு.பி.கணேசன், இ.ஆ.ப., அவர்களே! நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர்கள், அரசு உயர்‌ அலுவலர்கள், பங்கேற்று பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகை, ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்கள்,அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசினுடைய நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நிகழ்ச்சி என்பது அல்லது இந்த விழா என்பது விழாவாக மட்டும் நடத்தி முடித்து விடாமல் பல்வேறுதிட்டங்களைத் தொடங்கி வைக்கக்கூடிய, அந்தத் திட்டங்களின் தொடக்க விழாவாகநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பான இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர்திரு.வேலு அவர்களை நான் மனதார, உளமார பாராட்டுகிறேன்.நான் என்ன நினைப்பேன் என்று நான் சொல்லாமலேயே என் கண் ஜாடையைப்புரிந்து கொண்டு செயலாற்றுவதில் ..வேலு முன்னிலையில் இருக்கிறார் என்றுதலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.எதிலும் வல்லவர் வேலு, அவருடைய Initial பார்த்தால் தெரியும், ..வேலு, எதிலும் “எ” வல்லவர் “வ” எ.வ.வேலு என்று நான்பல நேரங்களில் குறிப்பிட்டதுண்டு. அதை இந்த நிகழ்ச்சியிலும் வழிமொழிய நான் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் நெடுஞ்சாலைத் துறையை மிகச் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்து, அதை வழிநடத்தி இன்றைக்கு பவள விழாவை பயனுள்ள விழாவாக இவர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவுப்பாறைக்கும் நடுவில் கண்ணாடி இழை பாலம் அமைத்தல்;
மதுரைகோரிப்பாளயம் சந்திப்பில் மேம்பாலம் கட்டுதல்;
சென்னை அடையாறு, மத்திய கைலாஷ் சாலைச் சந்திப்பில் மேம்பாலம் கட்டுதல்;

ஆகிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் இரண்டு ஆண்டுகளில் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரப் போகிறது. அந்த வகையில்இந்த பவளவிழா என்பது மக்களுக்கு பயனளிக்கக் கூடிய விழாவாக அமைந்திருக்கிறதுமக்களுடைய அன்றாட வாழ்க்கையில் தினந்தோறும் பயனளிக்கக் கூடியதுறையாக இருப்பது இந்த நெடுஞ்சாலைத் துறை.  வீட்டை விட்டு ஒருவர் வெளியே வாசலுக்கு வந்த உடனேயே இந்தத் துறையின் பயன்பாட்டைப் பெற்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையோடும் தொடர்புடையது இந்த நெடுஞ்சாலைத் துறை. அதனால் சரியான, அழகான, தரமான சாலைகளை அமைத்து விட்டாலே போதும்! அனைத்து மக்களிடமும் நல்லபெயரை முழுமையா நாம் வாங்கிவி முடியும். ரோடு சரியில்லை என்றால், வாகனத்தில் சென்று கொண்டு இருக்கக்கூடியவர்கள்முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அதே நேரத்தில், தரமானதா இருந்தால், பராவாயில்லையே, பளிங்கு மாதிரி ரோடு இருக்கே என்று பாராட்டக்கூடிய அந்த செய்தியும் மக்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும். எனவே, அரசாங்கத்திற்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று சொன்னால், அதேபோல ஒரு அவப்பெயரைப் பெற்றுத்தர வேண்டும் என்று சொன்னால், அதற்கு நெடுஞ்சாலைத் துறைதான் காரணமாக அமைந்திட முடியும்.  இந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடியவர் அவருக்குத் துணை நின்று பணியாற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மிகச் சிறப்பாக இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதைஅறிந்து நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.  இன்று நெடுஞ்சாலைத் துறைக்கு பவளவிழாவைக் கொண்டாடிக் கொண்டுஇருக்கிறோம். 

இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை
1946-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. தமிழ்நாடு உட்கட்டமைப்பில் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்றால்,தற்கு முழுமுதற் காரணம் இந்த நெடுஞ்சாலைத் துறைதான்.
1954-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி, இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இதுதான் இந்தியாவுக்கே முன்மாதிரியானஆராய்ச்சி நிலையம். இந்த ஆராய்ச்சி நிலையத்தை உலகத் தரம் வாய்ந்ததாகவிரைவில் மாற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நெடுஞ்சாலைத் துறைக்காக தனி அமைச்சகம் 1998-ஆம் ஆண்டுஏற்படுத்தப்பட்டது. அதை ஏற்படுத்தியவர் நம்மையெல்லாம் ஆளாக்கியமுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். எந்தத் துறையாக இருந்தாலும்அந்தத் துறையை மேன்மைப்படுத்தியவராக தலைவர் கலைஞர் அவர்கள்தான்அந்த முயற்சியிலே வெற்றி கண்டிருப்பார்.
சென்னையில் இன்று மிகப் பிரம்மாண்டமாகக் காணப்படும் அண்ணா மேம்பாலம்,அதை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

 

1969-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், முதலமைச்சராகப்பொறுப்பேற்றபின் நெடுஞ்சாலைத் துறையால் திட்டமிடப்பட்டு, வடிவமைத்துகட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் அண்ணா மேம்பாலம்.  5 சாலைகள் சந்திக்கக்கூடியஅந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அந்த நெரிசலை நீக்கி, அப்பகுதியில் சீரான சாலை போக்குவரத்தைஉறுதிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டு, நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாகஇன்று வரை மக்களுக்கு அது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஆசியாவின் முதல்மற்றும் இந்தியாவின் மூன்றாவது Grade separator மேம்பாலம்அந்த நாளில் 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் அந்தப் பாலம்.1.7.1973 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்தை முன்னோடியாகக் கொண்டு தொடர்ந்து தமிழ்நாட்டில்ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

1970-ஆம் ஆண்டு கோவையில் உயர்த்தப்பட்ட ரோட்டரி வகை இரயில்வேமேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் இந்தியாவில் ரோட்டரி வகையில்கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.
திருநெல்வேலி ஈரடுக்கு இரயில்வே மேம்பாலம் 1972ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ‘திருவள்ளுவர் மேம்பாலம்என்று பெயரிடப்பட்ட இந்த மேம்பாலம் தான்இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்கிற அந்தப் பெருமையும்பெற்றிருக்கிறது.
கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தமுதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் 1972-ஆம் ஆண்டிலேயேகிராமப்புறங்களில் சாலைகளை உருவாக்கிடத் தனியாக ஓர் அலகினைநெடுஞ்சாலைத்துறையில் தோற்றுவித்து கிராமப்புறச் சாலைகள்உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் அவர் வித்திட்டார்.
1972-ஆம் ஆண்டு 1,500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்குஇணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகஅரசினால் அறிமுகம் செய்யப்பட்டது.
1990-ஆம் ஆண்டு 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்துக்கிராமங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு, 517 கிராமங்கள் இணைப்புச் சாலை வசதிகளைப்பெற்றன. இணைப்புச் சாலை வசதி இல்லாத 1,000 பேருக்கு மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற சாதனையும்படைக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு மத்திய சுடு கலவை இயந்திரம், அதிர்வு உருளை, பேவர்இயந்திரங்களை அறிமுகப்படுத்தி சாலைகளை உறுதிப்படுத்தும் பணிகளைநெடுஞ்சாலைத் துறை செயல்படுத்தியதும் கழக ஆட்சியில்தான் என்பதும்குறிப்பிடத்தக்கது.
1997-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரே வீச்சில் ரூ.302 கோடியில் 106 பாலங்களைகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பாலங்கள் அனைத்தும் இரண்டுஆண்டுகளில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்பது இப்பொழுது நினைத்தாலும் நம்ப முடியாத சாதனையாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
1997ஆம் ஆண்டுக்குப் பின் சாலைப் பணியாளர்கள் நீக்கப்பட்டக் காரணத்தால்,நெடுஞ்சாலைகளை சரிவரப் பராமரிப்பதில் அதிக சிரமங்கள் ஏற்பட்டது. இந்தக்குறையைப் போக்கிட 1998-99-ல் 10,000 சாலைப் பணியாளர்கள்நியமிக்கப்பட்டார்கள்.  இத்தகைய சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை இந்தத்துறை செயல்படுத்தி வருவதை நான் மனமார பாராட்டுகிறேன். ரோடு போடுவதில் மிகப்பெரிய சிக்கலாக  இருப்பது என்னவென்று கேட்டால்அதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவது தான். நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என்று சொல்லிவிட்டு நேரத்தை நாம் கடத்திக் கொண்டிருக்க முடியாது. நில எடுப்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிற காரணத்தால் தான் பணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வர தாமதமாகிறது என்பதை அதிகாரிகள் அதை கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு,  அந்த சுணக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகதான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இனிமேல், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.ஆட்சி அமைந்த பிறகு எனக்குக் கிடைத்த தகவல்களில் வருத்தம் அடைய வைத்த ஒரு புள்ளிவிபரம் உண்டு. அது என்னவென்று கேட்டால், சாலை விபத்துகள். அந்த சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கக்கூடிய  மாநிலமாக நம் தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் அது.  அதனால் தான் அதைத் தவிர்க்க, அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சைச் செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்நம்மைக் காக்கும் 48″ என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தத் திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும். அதேபோல் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். விபத்தில் சிக்கியவர்கள் வேறு நாடு, வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தமிழ்நாடு முழுவதும் அதிகளவு விபத்துகள் நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட் 556 இடங்களில்  குறுகியகால நடவடிக்கைகளான வேகத்தடைகள் அமைத்திருக்கிறோம். சூரிய ஒளி பிரதிபலிப்பான்கள், தற்காலிகத் தடுப்பான்கள், சாலைக் குறியீடுகள் மற்றும் எச்சரிக்கைக் குறியீடுகள் போன்றவை அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விபத்துக்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய  சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்கரி அவர்கள் அண்மையில் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.  தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்புத் திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் விபத்துகள் குறைந்திருக்கிறது என்று மாநிலங்களவையில் பதிவு செய்திருக்கிறார். இதே மாதிரி ஒன்றிய அரசும், தமிழ்நாட்டைப் போல நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் பாராட்டு, நெடுஞ்சாலைத்துறையின் பங்களிப்பினால் ஏற்பட்டது என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்து, அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகளை சொல்ல விரும்புகிறேன். துறைப் பொறியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் நெடுஞ்சாலைத் துறையினரால் பல்வேறு வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மூன்று முறை நானே நேரடியாக சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை தெரிவித்திருக்கிறேன். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால், நெடுஞ்சாலைத்துறையினர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக வெள்ளச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு தங்குதடையற்ற போக்குவரத்தினை உறுதி செய்தார்கள். போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட   நெடுஞ்சாலைத் துறைக்கு என்னுடைய பாராட்டுதல்களை இந்த நேரத்தில் மனமுவந்து நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன் தொடர்ச்சியாக, சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 
இதில் மிக மிக முக்கியமானது முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம். இந்தத் திட்டத்தில், மாவட்டத் தலைமை இடங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களை இணைக்கும் 2,200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துச் செறிவின் அடிப்படையில், அடுத்த பத்து ஆண்டுகளில் நான்குவழிச் சாலைகளாகவும்; 6700 கிலோமீட்டர் நீள சாலைகள் இரண்டு வழித்தடச் சாலைகளாகவும் மேம்படுத்தப்பட இருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள 1,281 தரைப்பாலங்களை ரூ.2,401 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.
முதற்கட்டமாக 648 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக ரூ.610 கோடி மதிப்பில் கட்ட எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.  இரண்டாம் கட்டமாக, இந்த ஆண்டில், 435 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக ரூ.1,105 கோடி மதிப்பில் கட்ட எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
2026-க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாகத் இந்த தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறோம். அறிவிப்புக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த நெடுஞ்சாலை துறையை உருவாக்கிய நம்முடைய முத்தமிறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை மனதில் வைத்துக்கொண்டு இப்போது அறிவிப்பை நான் சொல்லப் போகிறேன். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை, ஈசிஆர் ரோடு, அந்த ரோடு இனிமேல் முத்தமிறிஞர் கலைஞர் கருணாநிதி சாலைன்று பெயர் சூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இந்த பவள விழா நிகழ்ச்சியில் நான் அறிவிக்க பெருமைப்படுகிறேன். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 59 நகராட்சிகளுக்குப் புறவழிச்சாலை அமைக்கப்படும். பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ள புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன். நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கையின்போது 18 முக்கியமான அறிவிப்புகளை மாண்புமிகு அமைச்சர் அமைச்சர் திரு.வேலு அவர்கள் அறிவித்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் திட்டமிட்டவாறு உருவாக்கினால்,தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மிகமிகச் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

என்னை பொருத்தவரை, தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் மிக மனநிறைவான வாழ்க்கையை அமைத்துத்தர தரமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். அந்த அடிப்படையில் முழுமையாக நல்ல சாலைகள் அமைத்துத் தரவேண்டும். தரமான சாலைகள் அமைத்துள்ளோம் என்றால், தரமான ஆட்சி அமைந்துள்ளது என்று பொருள். அத்தகைய பெயரையும், புகழையும் அரசுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று இந்தத் துறையில் இருக்கக்கூடிய அத்தனை பேரையும் மீண்டும் ஒரு முறை நான் கேட்டு,  விபத்து இல்லாத தமிழகம் அமைக்க சாலைகளும் சீராக அமைய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சுற்றுலா, வணிகம், வாழ்க்கை மேம்பாடு, மன மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சாலைகள் தான், தரம். அந்த தரமான சாலைகள் அமைத்துத் தரமான வாழ்க்கையைத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என்று இந்த விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் உறுதி எடுத்து விடைபெறுகிறேன். ச்நன்றி வணக்கம்!