புதுவைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறை மற்றும் புதுதில்லி தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகம் இணைந்து, தென் பிராந்தியத்தில் ஆசிரியர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவது குறித்த பிராந்திய அளவில் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். இப்பயிற்சி பயிலரங்கின் நிறைவு விழா பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. விழாவில், புதுவைப் பல்கலைக்கழக கல்விப்புல முதன்மையரும், கல்வி பயிற்சி பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஸ்ரீகலா, வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினரான புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ), பேராசிரியர் கே.தரணிக்கரசு நிறைவுரையில் தென்பிராந்திய பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ முதன்முதலில் நடைமுறைபடுத்தியது புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டுமே என்று கூறினார். குறிப்பாக ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி துவங்கியது மாபெரும் சாதனை முயற்சியாகும். இந்த ஆசிரியர் கல்வி படிப்பு ஒரு சோதனை முயற்சி திட்டம் என கூறுகின்றனர். ஆனால் ஒரு கல்வித்திட்டம் அல்லது புதிய படிப்பு அறிமுகம் செய்யும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறு இருப்பினும் அந்த புதிய படிப்பை கைவிடமுடியாது. மாறாக அதனை வெற்றிகரமாகவும் திறம்படவும் முன்றேற்ற பாதையில் கொண்டு செல்வதே நமது பல்கலைக் கழகத்தின் இலக்கு ஆகும். தற்போதைய சூழ்நிலையில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியின் தேவைகள், ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கோரிக்கைகள் குறித்து இது போன்ற பயிற்சி பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் தொடர்ந்து நிகழ்த்திட வேண்டும் என்று உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து புதுதில்லி, தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழக பேராசிரியர் பிரணதி பாண்டா, பயிலரங்கின் அறிவார்ந்த விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்தாழமிக்க பங்களிப்புகளுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பயிலரங்கில் தென்னிந்தியாவில் இருந்து பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த புல முதல்வர்கள்,துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.