ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கலியுகம்

*நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் நடிப்பில் தயாராகி வரும் ‘கலியுகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.* பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் ‘கலியுகம்’. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது. போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் ‘கலியுகம்’, திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.