இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்ட “தக்கு முக்கு திக்கு தாளம்” பாடல்

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம்.

தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

முதல் முறையாக தனது பாணியில் இருந்து மாறுபட்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்தவர் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது. படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளால் முதன் முறையாக வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர் பச்சான்.
“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!.. என்று தங்கர் பச்சான் எழுதிய
இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்கர் பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக தரண்குமார் இசை அமைத்துள்ளார்.

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள் . ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ்,நடனம் தினேஷ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கையாள்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.  விரைவில் அடுத்தடுத்த பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகும்.  கோடைகால வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார்கள்.

மக்கள் தொடர்பு: ஜான்சன்