இசைக் காதல் திரைப்படம் “சைக்கிள் கேப்”

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும்,எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் இசைக்காதல் திரைப்படம்’சைக்கிள் கேப்’. சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படங்களிலிருந்து தொடங்கி இசை  உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’. இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இத்திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சமீபத்திய படைப்பான ‘ட்ரீம் கேர்ள்’ காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது ‘சைக்கிள் கேப்’ இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.********

படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:* இசையமைப்பாளர்: சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்),  பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கௌஷிக் ஸ்ரீதரன்,  நிர்வாக தயாரிப்பாளர்: சுஜா சூர்யா நிலா, ஒளிப்பதிவு: சாலமன் போஸ் டி.எஸ்.,  படத்தொகுப்பு: சரவண எட்டயஞானம்,  வசனம்: ஹேமந்த் செல்வராஜ்