“கெவி” திரைப்பட விமர்சனம்

பெருமாள் ஜி, ஜெகன் ஜெயசூர்யா ஆகியோரின் தயாரிப்பில் தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஜாக்குலின், ஷீலா, சார்லஸ் வினோத், சிதம்பரம், ஜிவா, விவேக் மோகன், உமர் பாரூக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கெவி”. மலைப்பிரதேசமான கொடைக்கானலில் 15 கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கெவி கிரமம். இந்த கிராமம் கொடைக்கானல் மலையிலிருந்து 15 கிலோ மீட்டர் உயரத்தில் சாலை வசதி மருத்துவ வசதி உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் ஓரங்கட்டப்பட்ட அப்பாவி மக்கள் வாழ்கின்ற கிராமம் தான் “கெவி” கிராமம். இந்த் கிராமத்தில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி ஷீலாவுடன் வாழ்ந்து வருகிறார் அறிமுக கதாநாயகன் ஆதவன். இப்பகுதியின் காவல்த்துறை ஆய்வாளர் சார்லஸ் வினோத்துக்கும் ஆதவனுக்கும் முன்பகை உள்ளது. இதனால் ஆதவனை கொலை செய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறார் சார்லஸ் வினோத். இந்நிலையில் ஒரு இரவு நேரத்தில் ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அந்த இரவில் பிர்சவ வலியால் துடிக்கும் ஷீலாவை டோலியில் வைத்து கொண்டு லாந்தர் விளக்குடன் காட்டுப் பாதையில் சுமந்து வருகிறார்கள். இந்த நேரம் பார்த்து ஆதவனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் ஆய்வாளர் சார்லஸின் கண்ணில் படுகிறார் ஆதவன். இருவருக்கும் கைகலப்பு சண்டை நடக்கிறது. ஆதவனை கொலை வெறியுடன் தாக்குகிறார் சார்லஸ் வினோதன். அதே நேரத்தில் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவின் பனிக்குடம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உடைந்து விடுகிறது. ஷீலா குழந்தை பெற்றாளா? ஆய்வாளர் சார்லஸின் கொலை வெறி தாககுதலில் ஆதவன் என்ன ஆனார்? என்பதுதான் கதை. ஆதவன் அறிமுக நாயகனாக இல்லாமல் அனுபவம் வாய்ந்த நாயகனாக திரையில் மலையின மனிதனாககவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை மிக நன்றாக வேலை வாங்கியிருக்கிறர் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன். ஆய்வாளரின் அடிதாங்காமல் அலறும் காட்சிகளில் இரக்க குணம் படைத்த பார்வையாளர்களின் நெஞ்சம் வலிக்கிறது. அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்திறார் ஆதவன். பிரசவ வலியில் துடிக்கும் ஷீலாவின் நடிப்பு, பெண் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் வந்துவிடும். கன்னிப் பெண்கள் கல்யாணம் செய்துகொள்ள அஞ்சுவார்கள் போலிருக்கிறது. அப்படியே கல்யாணம் செய்துகொண்டாலும் கர்ப்பிணியாகக்கூடாதென்று எண்ணும் அளவுக்கு ஷீலா வலியில் துடித்து நடிதிருக்கிறார். இவ்விருவரையும் தவிர படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கேற்றபடி தங்களது தனிதிறமையுடன் நடித்து படத்துக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஜெகன் சூரியாவை பாராட்டியே ஆகவேண்டும். அவர் காமிராவைமட்டும் தோளில் சுமக்கவில்லை. இயக்குநரின் எண்ணங்களையும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். மலைவாழ் மக்களின் துயரங்களை அரசுக்கு சுட்டிக்காட்டியிருக்கும்  இயக்குநர் தமிழ் தயாளன் பாட்டுதலுக்குறியவர்.