சுதன் சுந்தரம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியன், ரைச்சல் ரபேக்கா, முத்துலட்சுமி, நிரோஷா மற்றும் அபிநயா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தாய் கிழவி”. மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மூதாட்டி ராதிகா சரத்குமார் வட்டித் தொழில் செய்து வருகிறார். ஊரே அஞ்சும் அளவுக்கு முரட்டுத்தனம் மற்றும் மிகவும் கறாரானவர், யாரிடமும் அஞ்சாதவர். இவருக்கு ஒரு மகள் ராய்ச்சல் மற்றும் ஆட்டோ ஓட்டுநரான அருள்தாஸ், கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சிங்கம்புலி), பூ விற்பனையாளர் பால சரவணன் என மூன்று மகன்கள் உள்ளனர். மூவருமே உருப்படாதவர்கள், சொத்துக்காகவும் பணத்துக்காகவும் அலைபவர்கள். இதனால் கடுப்பான ராதிகா, அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். சொத்துக்காகவும், பணத்திற்காகவும் அலைந்து திரியும் இவர்களுக்கும் தாய்க்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. முத்துக்குமார் தனக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையில் மீதமுள்ள 3 சவரன் நகைக்காக ராதிகாவிடம் சண்டை போடுகிறார். கோபம் அடைந்த ராதிகா எதற்கும் உதவாத மருமகனை விரட்டிவிட்டு, தனது மகள் மற்றும் பேரனை தன்னோடு வைத்துள்ளார். ராதிகா இரக்கமின்றி ஊர் முழுவதும் நடந்தே சென்று, பல ஆண்டுகளாகக் கடன் கொடுத்த பணத்தில் வட்டி வசூலிப்பார். ஒரு நாள் திடீரென ராதிகா உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்து மூளை மயக்க நிலைக்குச் செல்கிறார். தனது கிராமத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் ராதிகா, மரணப்படுக்கையில் இருக்கும் போது, அவரது சொத்துக்களை வாங்குவதற்கு அவரது மகன்கள், மருமகன் மற்றும் கிராம மக்கள் உட்பட, அனைவரும் அவர் இறக்க விரும்புகிறார்கள். அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் அவரது மரணத்திற்கு பிரார்த்தனைகளும், கொண்டாட்டங்களும் நடைபெறுகிறது. அவர் இறந்தால் சொத்து கிடைக்கும் என எதிர்பார்த்து ஓடி வரும் மகன்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ராதிகா ரகசியமாக சேர்த்து வைத்திருக்கும் 160 சவரன் தங்கம் எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த விஷயம் அறிந்ததும், அவரது மகன்கள் மருமகனுக்கு தெரியாமல் அவரை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க தீவிர முயற்சிகளை தொடங்குகிறார்கள். இந்த முயற்சியில், ஒவ்வொரு வகையான வீண் விரையங்களும், விரிவான அறிமுகங்களையும் பெறுகிறார்கள், அவர் ஒரு நிமிடம் கண் விழித்து அதை சொன்னால் மட்டுமே அவர்களுக்கு இந்தச் செல்வம் கிடைக்கும். அதுவரை அவரை உயிரோடு வைத்திருக்க மகன்கள் எடுக்கும் வினோதமான முயற்சிகளும், அதில் ஏற்படும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான திருப்பங்களும் படத்தின் கதை. 70 வயது மூதாட்டியாக உடல்மொழி, குரல் மற்றும் அரிதாரப் பூச்சில் முழுமையான மாற்றத்தை காட்டி ராதிகா ஒரு மூதாட்டியின் வலியை மிகத் தத்ரூபமாகக் காட்டி வாழ்ந்துள்ளார். மூளை மயக்க நிலையில் இருக்கும் போது படம் முழுவதும் அவர் படுத்த படுக்கையாக இருக்கும் காட்சிகளில், அவரது கண்கள் மற்றும் சிறு அசைவுகள் மூலம் காட்டிய நுணுக்கமான நடிப்பு அபாரம். உச்சக்கட்ட காட்சியில் ராதிகா சரத்குமாரின் திரைப்பயணத்தில் இது ஒரு மகுடம் சூட்டும் படைப்பு. நிச்சயம் அவருக்கு பல விருதுகள் காத்திருக்கிறது.
“தாய் கிழவி” திரைப்பட விமர்சனம்
