சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான நகைச்சுவ பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.டி.செல்லையா தயாரித்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.********

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம். இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

