“டியர் ரதி” – திரைப்படம் விமர்சனம்

மோகன மஞ்சுளா. எஸ். தயாரிப்பில் பிரவீன் கே.மணி இயக்கத்தில் சரவணா விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன், சரவணன் பழனிச்சாமி தமிழ்செல்வன், பசுபதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டியர் ரதி”. தகவல் தொழில் நுட்பத்துறையில் மென்பொறியாளராக வேலை பார்க்கும் சரவணா விக்ரமுக்கு உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அவர் பெண்களுடன் பேசுவதற்கு தயக்கமும் அச்சமும் அடைகிறார். அவரது கூச்சத்தைப் போக்க, பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானுடன் சரவணா விக்ரமை அவரது நண்பர்கள் பேச வைக்கிறார்கள். இதனால் சரவணன் விக்கரமின் உளவியல் பாதிப்பு குணமடைந்ததா? இல்லையா? அவரது கூச்சசுபாவத்தைப் போக்க பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமான் என்னென்ன செய்தார் என்பதுதான் கதை. நடிகர் சரவணா விக்ரம் முதலில் கதாபாத்திரத்திற்கு பொருந்தாதது போல் தோன்றினாலும்… தன்னுடைய பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுகிறார். பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை ஹஸ்லி அமான் – வசனம் பேசும் இடங்களை விட பேசாமல் மௌனமாக இருக்கும் பல தருணங்களில் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வசப்படுத்துகிறார். பாலியல் தொழிலாளி ஒருவருக்கும் கன்னி கழியாத இளைஞன் ஒருவருக்கும் இடையேயான ஒரு நாள் பழக்கம்தான் படத்தின் மைய கதை என்றாலும்.. இதன் பின்னணியில் இயக்குநர் உருவாக்கி இருக்கும் இருண்ட உலகம்-  இருண்ட மனிதர்கள்-  ரசிகர்களை கவரவே செய்கிறார்கள்.