“உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” – வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

-தங்க முகையதீன்-

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். “எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் வலிமையாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில், இன்றைக்கு உலகின் பல நாடுகளில் வாழும் நீங்கள் தமிழ் உணர்வோடு, தமிழ்ப் பற்றோடு, தமிழ்நாட்டின் மீது இருக்கக்கூடிய பாசத்தோடு இந்தநிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்திருக்கின்றீர்கள். பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு, தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில், அயலகத் தமிழ் உறவுகள் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றது, என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என்னுடைய குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த நெகிழ்ச்சியை, அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது. அயலகத் தமிழர் தினத்தை நம்முடைய திராவிட மாடல் அரசின் ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். இந்த ஆண்டுக்கான தலைப்பு, ‘தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்று வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழி நம் அனைவரையும் இணைக்கக் கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்து பார்க்காது, யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம்முடைய தாய் மொழி தமிழ் மொழி. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டி நம் அனைவரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய் மொழி, தமிழ்மொழி. அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான், இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கின்றோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது. அந்த வகையில், உலகெங்கும் வாழக் கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அந்த பணி என்பது மிக, மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக, மிக அவசியமானது. அதைவிட முக்கியம் அவர்களுடைய நலன்களை பாதுகாக்கின்ற அந்த பணி என்பது மிக, மிக முக்கியம். இப்படி குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும்போது, தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள். இதில் இன்றைக்கு சுமார் 32 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள். இதன் மூலம் அயலகத் தமிழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இந்த வாரியம் உங்களுக்கு பல உதவிகள் செய்தாலும், அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அடையாள அட்டை என்பது ஒரு மிகச் சிறந்த  உதாரணம். இந்த அடையாள அட்டை என்பது உங்களுடைய தாய் வீட்டு அடையாளம். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், சிக்கல் வந்தால், அதற்கு தீர்வு காண எல்லா உதவிகளையும் இந்த துறை உடனடியாக செய்து கொடுத்து இருக்கிறது. நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும்,  பண்பாட்டையும் மறந்து விடக்கூடாது. உங்களுடைய குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு தமிழ் நாட்டினுடைய அடையாளத்தை சொல்லித் தருவது மிக, மிக முக்கியம். அதற்காகத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆண்டுதோறும் வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களுடைய அடுத்த தலைமுறை பிள்ளைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, நம்முடைய பண்பாட்டு சின்னங்களை, அடையாளங்களை எல்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். நம் ஊரில் இருக்கக்கூடிய பண்பாட்டுச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எல்லாம் அவர்கள் நேரடியாக பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும், ஒருபரவசம் ஏற்படும். இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கின்ற இடம் தமிழ்நாடு என்ற அந்த நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு உங்களுடைய குழந்தைகளுக்கு நிச்சயம் ஏற்படும். இப்போது நம்முடைய அரசின் சார்பாக, ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற ஒரு திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசின் திட்டங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், எதிர்காலத்தில் என்ன மாதிரி திட்டங்கள் வர வேண்டும் என்று மக்களுடைய கனவுகளை கேட்டு அறிகின்ற முயற்சி தான் இந்த ‘உங்க கனவ சொல்லங்க’ என்ற திட்டம். அதேபோல், அயலகத் தமிழர்களும் உங்களுடைய கனவுகளை, இந்த வாரியத்தின் பொறுப்பாளர்களிடம், அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் தீட்டி செயல்படுத்துவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.