“கிராணி” திரைப்படம் விமர்சனம்

-தங்க முகையதீன்-

——————

விஜயமாரி தயாரிப்பில் விஜய் குமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி, திலீப்ன், சிங்கம்புலி, கஜராஜா, அனத்துநாக், அபர்ணா, சிறுவன் ஞானஷியாம், சிறுமி சண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிராணி”. லண்டனில் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்து அலுத்துப்போன ஆனந்த்நாக் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தன் சொந்த கிராமத்திலிருக்கும் தங்களது பூர்வீக பங்களாவில் குடியேறி விவசாயம் பார்க்க வருகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததும் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார்கள். அந்த அமானுஷிய சக்திக்குப் பின்புலமாக, பல ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு மந்திரவாதி என்றென்றும் இளமையாக இருக்க 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூவில் கசாயம் செய்து குடித்து, அதோடு  குழந்தையின்  பச்சை இதயத்தை கடித்து தின்று வயோதிகத்திலும் இளமையாக மாறி வாழ்ந்து வருகிறார். நாளடைவில் இது ஊர்மக்களுக்கு தெரிந்ததும் அந்த மந்திரவாதியை தீவைத்து எரித்து கொன்றுவிடுகிறார்கள். அந்த மந்திரவாதி செய்த அதே வேலையை அவனின் மனைவி வடிவுக்கரசியும் செய்து என்றென்றும் இளமையாக இருக்க பூவின் கசாயமும் குழந்தைகளின் இதயத்தையும் தின்று இளமையாக மாற அந்த பங்களாவுக்குள் மறைந்து வாழ்கிறாள். அந்த பங்களாவுக்குதான் ஆனந்த்நாக் தன் குடும்பத்பினருடன் வருகிறார். இவர்கள் மந்திரவாதி வடிவுக்கரசியிடமிருந்து தப்பித்தார்களா?  அதே பங்களாவுக்குள் துப்பறிய வந்த காவல் ஆய்வாளர் திலீபனும் காவலர் சிங்கம்புலியும் கிழவி வடிவுக்கரசியிடமிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. வடிவுக்கரசியின் ஒப்பனை அச்சமூட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. கொடூரக் கிழவியாக வந்து திரையரங்கிலிருக்கும் பார்வையாளர்களை தொடை நடுங்க செய்திருக்கிறார். (சிறுவர்களை இப்படத்தை பார்க்க அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது). நகைச்சுவை நடிகரான சிங்கம்புலியை இப்படத்தில் வேறுவிதமாக பார்க்கலாம். சாதிவெறி பிடித்தவராக வரும் கஜராஜாவின் கதாபாத்திரம் இப்படத்துக்கு துணைநிற்கவில்லை. படத்தின் மிகப்பெரியபலம் ஒளிப்பதிவாளர் மணிகண்டனும் இசையமைப்பாளர்  செல்லையா பாண்டியனும்தான். பேய் படத்துக்கேற்ற ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்காவாக பொருந்தியிருக்கிறது. உச்சக்கட்ட காட்சியின் திருப்புமுனையாக அமைந்திருப்பது சிங்கம்புலியின் கதாபாத்திரம்தான். இப்படத்தை இரண்டாம் பாகத்திற்கும் இழுத்துச் சென்றிருக்கிறார் கொடூர கற்பனையாளர் இயக்குநர் விஜய் குமரன்.