ராஜேஷ் கெஜிரிவால், குர்பால் சாச்சர் தயாரிப்பில் கிஷோர் பாண்டுரங் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அதிதிராவ் ஹைடாரி, சித்தார்த் ஜதவ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காந்தி டாக்ஸ்”. மும்பையில் நடுத்தர மக்கள் குடியிருக்கும் தீப்பெட்டி போன்ற குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நோய்வாய் பட்டிருக்கும் தன் தாயுடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி, அவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் அதிதிராவ் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு காலை மதியம் இரவு உணவுகளை கடனுக்கு கொடுக்கிறார். ஆனால் இருவரும் காதலிக்கிறார்கள். விஜய் சேத்குபதிக்கு தன் தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் மும்பையில் செல்வந்தராக இருக்கும் அரவிந்தசாமியிடம்
பணத்தை திருட அவரது பங்களாவுக்குள் நுழைகிறார் விஜய் சேதுபதி, அதே நேரத்தில் அந்த பங்களாவுக்குள் ஒரு திருடனும் நுழைகிறான். இந்நிலையில் அரவிந்த்சாமி தன் சொந்த பங்களாவை தீவைத்து எரிக்கிறார். ஏன் அரவிந்தசாமி தன் சொந்த பங்களாவையே எரிக்கிறார்? அந்த பங்களாவுக்குள் திருட நுழைந்த விஜய் சேதுபதியும் திருடனும் என்ன ஆனார்கள்? என்பதுதான் கதை. கதையில் யாருக்கும் வசனம் இல்லை. ஒரு மௌனப் படத்தை இயக்கி சலிப்பு தட்டாமல் படத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங். நோயாளி அம்மாவுடன் போராடிக்கொண்டே, வேலை தேடிக்கொண்டே, எதிர் வீட்டில் வசிக்கும் அழகான பெண்ணை காதலிக்கிற கேரக்டரில் விஜய்சேதுபதியின் நடிப்பு திறமை பளீச்சிடுகிறது. இண்டர்வியூ போய் அவமானப்படுவது, காதலியை பெண் பார்க்கிற சீன், கத்தி வாங்க மார்க்கெட் செல்வது, அம்மாவுக்காக பக்கத்து வீட்டு உணவை திருடுவது, அரசியல்வாதியிடம் சீறுவது என பல இடங்களில் பின்னி எடுத்து இருக்கிறார். அரவிந்தசாமி பங்களாவுக்கு என்ட்ரி ஆகி அவர் திருட நினைக்கிற காட்சிகளும், பங்களாவை சுற்றி, சுற்றி வருகிற இடங்களும் இன்ட்ரஸ்டிங். ஆனாலும், அந்த காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்கலாம்.
பணத்தை, குடும்பத்தை இழந்து கடனாளியாக தவிக்கிற கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்து கலக்கியிருக்கிறார். அவர் பின்னால் கார் ஓட்டும் காட்சி, பங்களாவில் தனிமையில் அழுகும் இடங்கள் அற்புதம். அழகான பெண்ணாக அவ்வப்போது அதிதி ராவ்வும் வந்து காதல் செய்கிறார். அவருக்கும், விஜய்சேதுபதிக்குமான காதல் கொஞ்சம் நெருடுகிறது. கொஞ்சம் செயற்கைதனமாக இருக்கிறது. இவர்களை தவிர, பக்கத்து வீட்டுக்காரர், அரவிந்த்சாமியின் டிரைவர், போலீஸ்காரர், இன்டர்வியூ நடத்துபவர், விஜய்சேதுபதி அம்மா ஆகியோர் கேரக்டரும் வித்தியாசமாக, அழுத்தமாக இருக்கிறது. இவர்களின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.
குறிப்பாக, அந்த கோர்ட் சீன், பேரம் நடக்கும் விதம் இயக்குனரின் திறமைக்கு சாட்சி. கிளைமாக்சில் பணம் முக்கியமா? இல்லையா என்பதை காந்தி பாணியில் சொல்லியிருக்கிறார். மராட்டிய இயக்குனர் என்பதால் சத்ரபதி சிவாஜியையும் உயர்வாக காண்பித்து இருக்கிறார். கிரணின் கேமரா மும்பையை , விஜய்சேதுபதி வசிக்கும் வீட்டை, அந்த குடியிருப்பை, அரவிந்த்சாமி பங்களாவை அவ்வளவு அழகாக காண்பித்து இருக்கிறது. திருடனாக வரும் மராட்டி நடிகர் சித்தார்த் கெட்அப், அவருக்கான சீன், கிண்டல், தவிப்பு பிரஷ் ஆக இருக்கிறது. கிளைமாக்ஸ் உண்மையில் பாராட்டகூடியது.

