தமிழ் சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைப் பெரிதும் தூண்டும் விதமாக அமைந்தது, நடிகர் சிலம்பரசன் டி.ஆருடனான இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் கூட்டணி. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் இப்படைப்பு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, இப்படத்தின் தலைப்பு ஆங்கில எழுத்தான ‘ஐ’இல் தொடங்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை, சமூக ஊடகத்தில் சிலம்பரசன் டி.ஆருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பொழுது நுட்பமாக வெளியிட்டார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. அவரது இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையின் கவனத்தை உடனடியாக ஈர்த்துப் பரவலாகப் பெரும் உவகையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.******
இந்த அறிவிப்பு வெளியானவுடனே, ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ரசிகர்கள் வெகு உற்சாகமாகச் சமூக ஊடகத்தில், இப்படம் குறித்தான யூகங்களிலும் உரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலம்பரசன் டி.ஆர், அஷ்வத் மாரிமுத்து இணை சேருவதாகப் பேச்சு எழுந்தது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தீப்பற்றியது போல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. திரையில் வீரியத்துடன் வெளிப்பட்டுப் பெரும் ரசிகர் கூட்டத்தை வசப்படுத்தியிருக்கும் பன்முக திறமையாளரான சிலம்பரசன் டி.ஆரும், புதுமையாகவும், மனவெழுச்சியை ஏற்படுத்தும்விதமாகவும், சுவாரசியமாக கதை சொல்லும் அஷ்வத் மாரிமுத்துவும், ரசிகர்களுக்குத் தனித்துவமான ஒரு திரைப்பட அனுபவத்தைத் தர உறுதியளிக்கின்றனர். தரமான படைப்புகளையும், பெரிய முதலீட்டுப் பொழுதுபோக்கு படங்களையும் வழங்குவதில் பெயர் பெற்ற புகழ் வாய்ந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றது. சிலம்பரசன் டி.ஆரின் “அரசன்” திரைப்படம் தற்போது சீராக முன்னேறி வருவதால், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், மற்றும் தலைப்பைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். வலுவான இக்கூட்டணியின் இணைவால், இப்படம், தமிழ்த் திரைத்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ஏற்கெனவே உருவாகிவிட்டது. இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

