“நீ பேரவர்” திரைப்பட விமர்சனம்

புகழ், எடன் தயாரிப்பில் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந், அர்சானா ரவி, பரது, நோபிள் சேம்ஸ், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஶ்ரீராம், ராதிகா ஶ்ரீனிவாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நீ பேரவர்”. பொள்ளாச்சியில் ஒய்.ஜி.மகேந்திரனின் பேரன் சுதர்சன் கோவிந்துக்கு தான் பார்த்துவைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு சென்று ஒரு தொழில்நுட்ப குழுமத்தில் பணிக்கு சேருகிறார் சுதர்சன். ஆனால் அக்குழுமத்தின் நிர்வாகி, அவரின் காதல் அனுபவத்தை கேட்கிறார். இதற்கு “நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை” என்று சுதர்சன் பதிலளிக்கிறார். காதல் அனுபவம் இல்லாத நீங்கள் எப்படி காதலுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்க முடியும்? முதலில் ஒரு பெண்ணை காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை சொல்லுங்கள் என்று குழுமத்தின் நிர்வாகி கூறிவிடுகிறார். இது இப்படி இருக்க, ஒரு காதல் திரைப்படத்தை இயக்க வேண்டுமென்று கதாநாயகி அர்ச்சனா தயாரிப்பாளர்களை அணுகுகிறார். அவரும் அர்ச்சனாவிடம் உங்கள் காதல் அனுபவத்தை கேட்க, “இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை” என்று அர்ச்சனா பதிலளிக்க, “நீங்கள் காதலித்துவிட்டு அந்த அனுபவத்தை கதையாக இயக்குங்கள்” என்று தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். இந்தநிலைப்பாட்டோடு சுதர்சனும் அர்ச்சனாவும் ஒரு உணவகத்க்தில் சந்திக்கிறார்கள். இருவரும் காதலிக்க முடிவு செய்கிறார்கள். சுதர்சன் உண்மையாகவே அர்ச்சனாவை காதலிக்கிறார். ஆனால் அர்ச்சனா அனுபவத்துக்கு மட்டுமே காதலிப்பதுபோல் நடிக்கிறார். இதற்கிடையில் பொள்ளாச்சியிலிருக்கும் சுதர்சனின் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் காதல் திருமணத்தை வெறுக்க காரணம் என்ன? சுதர்சன் அர்ச்சனா காதல் என்ன ஆனது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் “நீ பேரவர்” திரைப்படம். ஒரு புதிய கோணத்தில் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இப்படத்தை இயக்கியுள்ளார். அவரின் சிந்தனையும் திரையுலகத்திற்கு புதியதாகத்தான் இருக்கிறது. காதலில் ஈடுபடும்போது அதன் சுகத்தையும், காதல் கனாவாகிவிடும்போது அவர்படும் துன்பத்தையும் தன் உடல்மொழியால் சுதர்சன் வெளிப்படுத்தும் விதம் ரசிக்கும்படி உள்ளது. அதே நேரம் தாத்தா ஒய்.ஜி.மகேந்திரனிடம் அவர் பணிந்து செல்லும் காட்சிகளும். அம்மாவிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார் சுதர்சன். ஒய்.ஜி.மகேந்திரனின் அனுபவ நடிப்பும் அலட்டிக்கொள்ளாமல் எளிதாக தன் கதாபாத்திரத்தை கடந்து செல்லும் விதமும் பாராட்டுதலுக்குறியது. மெச்சத்தகுந்த நடிப்பால் ஒய்.ஜி.மகேந்திரன் மின்னுகிறார். கதாநாயகி அசர்ச்சனாவின் நடிப்பு அலாதியாகத்தான் இருக்கிறது. ரசிகர்களின் மனதை அவ்வப்போது தடவிக் கொடுத்துவிட்டு போகிறார். நடிப்புக்காக காதலித்த காதல் காட்சியிலும், காதல் இதயத்தில் கனிகின்ற காட்சியிலும் அர்ச்சனாவின் விழிகள் பேசுகிறது. அஸ்வின் ஹேமந்தின் இசை இதயத்தை லேசாக்குகிறது. படத்தின் ஓட்டத்திற்கு அவரின் இசை பாதை அமைத்துக் கொடுக்கிறது. சிறந்த முறையில் படத்தொகுப்பை வழங்கியுள்ளார் நாகார்ஜுன். பொள்ளாச்சியுன் அழகையும் ஆற்றின் கரைகளையும் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடித்துள்ள ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு  படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. புதிய சிந்தனையுடன் படமாக்கியுள்ள இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பாராட்டுதலுக்குறியவர்