“பைக்கர்” திரைப்பட விமர்சனம்

வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரின் தயாரிப்பில், அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், நிரூப், மாஸ்டர் சௌர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பைக்கர்”. கோயம்புத்தூரில் 1994 ஆம் ஆண்டில் டாக்டர் ராஜசேகர், வளைவு மண்பாதையில் தாவிக் குதித்தோடும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருக்கிறார். இவருடைய லட்சியம் இந்த மோட்டார் சைக்கிள் விளையாட்டை,  மட்டை பந்தாட்ட விளையாட்டுக்கு இணையான உலகளவில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதற்காக அவரது மகன் ஷர்வானந்துக்கு சிறுவயதிலிருந்தே கடுமையான பயிற்சி கொடுத்து வளர்கிறார்.  மகன் ஷர்வானந்த் பருவ வயதை அடைந்ததும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள ஒரு கார்ப்பரேட் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து அதற்காக ஒரு பெருந்தொகையை டாக்டர். ராஜசேகர் பெறுகிறார். இந்நிலையில் ஷர்வானந்த் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மாளவிகா நாயரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தந்தைக்கு தெரியாமல் ஒரு இடத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார். மகன் போட்டியில் கலந்து கொள்ளாததால் கார்ப்ரேட் குழுமத்திடம் பெற்ற தொகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் டாக்டர்.ராஜசேகர். தந்தை கஷ்டப்படுவதை கேள்விபட்ட ஷர்வானந்த் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்ள தந்தையிடம் வருகிறார். ஆனால் ராஜசேகர் அதை விரும்பவில்லை. இருந்தாலும் தந்தையின் லட்சியத்தை மகன் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் கதை. ஷர்வானந்த் ஒரு குடும்பத்தலைவனாகவும் தந்தைக்கு மகனாகவும் உணர்ச்சிப்பொங்க நடித்திருக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.  டாக்டர் ராஜசேகர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜசேகர் ஒரு அழுத்தமான தந்தை கதாபாத்திரத்தில் திரையில் தோன்றியுள்ளார். மாளவிகா நாயர கதைக்குத் தேவையான உணர்ச்சிகரமான பிணைப்பை வழங்குகிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதலில் ஒரு பாலமாக இருந்து, குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். மோட்டார் எஞ்சின் சத்தங்களோடு இசையை இணைத்த விதம் அபாரம். ஒளிப்பதிவு ஜே. யுவராஜ் பந்தயக் களத்தின் புழுதி, வேகம் மற்றும் ஆபத்தான திருப்பங்களை கேமராவில் மிக நெருக்கமாகப் படம்பிடித்துள்ளார். உச்சக்கட்ட காட்சியில் வரும் பந்தயக் காட்சிகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. விளையாட்டுக்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும்