ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில்,  “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை”  மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான் இன்னும் அதிக அளவில் இலவச உயர் கல்வி வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்கள் உயர் கல்வி பயில தேவி அறக்கட்டளை உதவி செய்து வதுகிறது. அந்த வகையில், தற்போது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை இல்லாத மாணவர்-மாணவியர்கள், குடும்பத்தின் முதல் பட்டதாரி, நல்ல மதிப்பெண் பெற்றும் மேல் படிப்பு படிப்பதற்கான வசதி இல்லாதவர்கள் என முதல் கட்டமாக 20 பேரை தேர்வு செய்துள்ளது, தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை. தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை சுமார் 450- க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயின்று, சிறந்த நிறுவனங்களில், உயரிய பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். வெளியில் பணியாற்றி கொண்டிருந்தாலும், தங்களை படிக்க வைத்து இந்த நல்ல நிலமைக்கு கொண்டு வந்த தேவி அறக்கட்டளையிலும் தொண்டாற்றி வருகிறார்கள். இவர்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாணவர்கள் அழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தி முதல் கட்டமாக  தகுதியுள்ள 20 மாணவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்த கட்ட பணி நடந்து வருகிறது. ******