ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றி விழா

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது: “சினிமாவில் இது என்னுடைய முதல் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாத் லேப் மேடை எனக்கு பழசு. ஆனால், இந்த உணர்வு புதிதாக உள்ளது. ஏனெனில், இது என் முதல் நன்றி தெரிவிக்கும் விழா. கஸ்தூரி ராஜா போன்ற பெரியவர்கள் என்னை குரு என்று சொல்வது எனக்கு கூச்சமாக உள்ளது. இது எனக்கு முதல் முறை. என்னை சினிமாவிற்கு அனுமதித்த என் குடும்பத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்குமே நன்றி. நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்திற்கு பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்த படத்தை தோளில் தூக்கி சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது. நண்பர் என்பதால் ராம் இதனை எனக்கு செய்யவில்லை. எல்லா நல்ல படங்களுக்கும் அவர் செய்வார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் முன்வர வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன் அனைவருக்கும் நன்றி”என்றார்.