குழந்தைகள் தினத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோருக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கும் ரெயின்டிராப்ஸ் – வானமே எல்லை! வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் வகையில், ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன் சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை’ என்ற சிறப்பான முன்னெடுப்பு நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 14, 2026, சனிக்கிழமை, சென்னையிலிருந்து திருச்சிக்கு 50 பயனாளிகள் விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் பலருக்கு இதுவே முதல் விமானப் பயணமாக அமைய உள்ளது. பொருளாதாரச் சூழல் காரணமாக இதுவரை எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணம், இந்த முன்னெடுப்பின் மூலம் நனவாக உள்ளது.*********
பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் மகிழ்ச்சிப் பயணம்! இந்தப் பயணத்தில் ஆனந்தம் கல்வி மையம், ஆனந்தம் சிறப்புப் பள்ளி, சேவாலயா, மாற்றம் ஃபவுண்டேஷன் மற்றும் ரெயின்டிராப்ஸ் கல்வி உதவித்திட்டத்தின் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ரெயின்டிராப்ஸ் அன்பகம் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய ஒரு மாணவர் மற்றும் ஒரு திருநம்பி ஆகியோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.
நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்: “நம்மில் பலருக்கு விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண அனுபவமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அது வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவர்களுக்கு விமானப் பயணத்தை மட்டும் வழங்குவது எங்கள் நோக்கமல்ல; அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய கனவுகளும் முக்கியமானவை என்ற உணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். இந்த ஆண்டு பயணத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாக எங்களது வானமே எல்லை முன்னெடுப்பில் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை என்பது வெறும் விமானப் பயணம் மட்டுமல்ல; வசதி வாய்ப்புகள் குறைந்தவர்களின் கனவுகளுக்கு சிறகளிக்கும் ஒரு தொடர் சமூக முன்னெடுப்பாகும். கனவுகளுக்கு வயது கிடையாது, திறன்களின் அடிப்படையில் கனவுகள் கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அழகான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

