தீபாவளித் திருவிழா தமிழர் திருவிழாவா? – விளக்குகிறார் பேராசிரியர் முனைவர் இ.ஜே.சுந்தர்

தீபாவளி தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கான இலக்கிய ஆதாரங்கள் ஏதும் இல்லை. பாரதியார் கூட தீபாவளி பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. நிச்சயமாக இது தமிழர் திருநாள் அன்று. தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற பழம் இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், தீபாவளி பற்றி எந்தச் செய்தியும் இல்லை. தமிழகத்துக் கடும் மழைக் காலம் எப்படி விழா காலமாக இருக்கமுடியும்?

இருபதாம் நூற்றாண்டில், இந்தியாவில் சுதேசி பிரச்சாரத்திற்கு, வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த தீபாவளிப் பண்டிகை பயன்பட்டது. கரதாடையை விற்பனை செய்யும் நோக்குடன் காங்கிரஸ் தலைவர்கள் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட மக்களை வேண்டினர். எனவே ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குள்தான் தீபாவளிக் கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் பெரு வழக்கிற்கு வந்துள்ளது. நரகாசுரனை வதம் செய்ததோடு தொடர்புபடுத்தி தீபாவளி கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டு வந்தாலும், தீபாவளிக்கு வேறு 5 காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை:

1. தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்ற நாள்

2. மகாவீரர் வீடுபேறு பெற்ற நாள்

3. இராமன் அயோத்தி திரும்பிய நாள்

4. சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் அரியணை ஏறிய நாள்

5. ஆதி சங்கரர் ஞானபீடத்தில் அமர்ந்த நாள்

வட இந்தியாவில் பாபர் காலத்தில் வான வேடிக்கைகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. சமரச நோக்கம் கொண்ட அக்பர் தீபாவளியை எல்லா மதத்தினரும் தம் நாட்டில் கொண்டாட வேண்டினார்.