வேல்ஸ் மியூசிக் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே.கணேஷ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, சுனில், குஷ்பூ, சினேகா, சுவாமிநாதன், ராமச்சந்திர ராஜூ, மைனா நந்தினி, விச்சு விஸ்வநாத், சத்தியன், இனியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி”. நயன்தாரா காவல்த்துறை காவலாராக படத்தில் அறிமுகமாகிறார். அவரது வளர்ப்பு அம்மா ஊர்வசி. இரவுநேர தூக்கத்தில் நயன்தாரா பயங்கரமான கனவு காண்கிறார். கனவில் வரும் அமானுஷ்ய காட்சிகள் மிகப் பயங்கரமாக இருக்கிறது. அக்கனவில் “மைலாஞ்சி” என்ற ஊரை காண்கிறார். அதனால்அந்த ஊருக்கு தன் வேலையை மாற்றுதல் வாங்கி கொண்டு காவலராக வந்து சேர்கிறார் நயன்தாரா. அவ்வூரில் சிறு குழந்தைகளை ரெஜினா கசாண்ட்ரா சாத்தானுக்கு நரபலி கொடுத்து வருகிறார். ஏன் அவர் நரபலி கொடுக்கிறார்? அந்த ஊர்க் கோவிலில் காணாமல் போய்யிருக்கும் மூக்குத்தி அம்மன் சிலை எங்கே? அந்த மூக்குத்தி அம்மனே தான்தான் என்பதை அறியாமலேயே இருக்கும் நயன்தாரா, எப்போது மூக்குத்தி அம்மனாக வெளிப்படுகிறார் என்பதை விறுவிறுப்பாகவும் மயாஜால வித்தைகளுடனும் சுந்தர் சி.சொல்லியிருப்பதுதான் மீதிக்கதை.
நயன்தாராவின் அம்மன் தோற்றம் மற்றும் அவரது திரை ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். குழந்தை சம்பந்தப்பட்ட காட்சி, சிங்கச் சிலை மீது அமர்நிதுக்கும் காட்சி எனப் பல இடங்களில் நயன்தாராவின் திரை இருப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. சாத்தானை வணங்கும் ரெஜினாவும் தனது நடிப்பில் முதிர்ச்சி அடைந்திருக்கிறார். சினேகா மற்றும் குஷ்பு ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியதாக உள்ளது. ஊர்வசி, சுனில் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். படத்தின் அமானுஷ்ய காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது. படத்துக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருப்பது ஹிப்ஹாப் ஆதி தமிழாவின் பின்னணி இசைதான். உச்சக்கட்ட அம்மன் காட்சி பாடலுக்கு திரையரங்கில் சாமி ஆடிவிடுவார்கள். அப்படியொரு இசையை வெளுத்து வாங்கிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இப்படத்தில் யோகிபாபு வீணடிக்கப்பட்டிருக்கிறார். படம் முழுக்க நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சதை தொட்டிருக்கிறது. பொதுவாக ரசிகர்களுக்கு காதுகுத்துவதில் வல்லவர் சுந்தர் சி. இப்போது அம்மனுக்கே மூக்குத்தி குத்திவிட்டார். எது எப்படியோ அம்மன் பக்தர்களுக்கு இப்படம் கொண்டாட்டம்தான். பட்டிதொட்டியெங்கும் மூக்குத்தி அம்மன் (2) வலம்வரப்போகிறாள். திரையரங்குகளில் அம்மன் ஆட்டமும் ஆராதனைகளும் நடக்கும்.

